புதுடில்லி:பூங்காக்களை பராமரிக்கும் தோட்டக்காரர்கள் பற்றாக்குறை நிலவுவதால், அந்தந்த பகுதி குடியிருப்போர் நல சங்கங்களுக்கு, மாதம் தோறும் குறிப்பிட்ட பணத்தை வழங்க, டில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் முடிவு செய்துள்ளது. இந்த பணத்தால், குடியிருப்போர் நல சங்கங்களுக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும்.
டில்லி மாநகராட்சி எனும் எம்.சி.டி.,யில் குடியிருப்போர் நல சங்கங்களுக்கு, மாதம் தோறும், 13,500 ரூபாய் வழங்கப்படுகிறது. கடந்த வாரம் முதல் இந்த தொகை, குடியிருப்போர் நல சங்கங்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த தொகை, அந்தந்த கோட்டங்களுக்கு மாறுபடும். கிழக்கு பகுதியில் உள்ள கோட்டங்களுக்கு, 8,660 ரூபாய் ஒரு ஏக்கருக்கு வழங்கப்படுகிறது.
அதுபோல, வடக்கு பகுதியில் உள்ள கோட்டங்களுக்கு, 8,000 ரூபாய் வழங்கப்படுகிறது. தெற்கு கோட்டத்தில் உள்ள குடியிருப்போர் நல சங்கங்களுக்கு, மாதம்தோறும் 13,500 ரூபாய் அதிகபட்சமாக, ஒரு ஏக்கருக்கு வழங்கப்படுகிறது.
இந்த தொகையை வைத்து, அந்த பகுதியில் உள்ள பூங்காக்களை அந்தந்த குடியிருப்போர் நல சங்கங்களை சேர்ந்தவர்கள் புனரமைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால், புதிதாக தோட்டப் பராமரிப்பாளர்களை நியமித்துக் கொள்ளலாம்.
மேலும், மாநகராட்சி சார்பில், இலவசமாக, கம்போஸ்ட் உரங்களும் வழங்கப்படும்.
இவற்றை வைத்து, பூங்காக்களை அந்தந்த குடியிருப்போர் நல சங்கங்கள் பராமரித்துக் கொள்ளலாம்.
தற்போதைய நிலையில், டில்லி மாநகராட்சியின், 12 கோட்ட நிர்வாகத்தின் கீழ், 15,320 பூங்காக்கள் உள்ளன. இதன் மொத்த அளவு, 5,200 ஏக்கர். இவற்றை பராமரிக்க, 911 தோட்டக்காரர்கள் தான் உள்ளனர். 814 பேர் தற்காலிமாக நியமிக்கப்பட்டுள்ளனர். 2,355 தோட்டக்காரர்களை அவுட்சோர்சிங் என்ற முறையில் பயன்படுத்திக் கொள்கிறது.
இதனால், பூங்காக்களை பராமரிக்க முடியாமல், மாநகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.
இதுபற்றி, மயூர்விஹார் பேஸ் 1ல் உள்ள ஒருவர் கூறும் போது, ‘எங்கள் பகுதியில், 203 பூங்காக்கள் உள்ளன. அவற்றை பராமரிக்க, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், எட்டு பணியாளர்கள் தான் உள்ளனர். இதனால், பல பூங்காக்கள் கவனிக்கப்படாமல் உள்ளன. சில பூங்காக்களில் களைகள், ஆள் உயரத்திற்கு வளர்ந்துள்ளன,” என்றார்.
