தென் மாநிலங்களை அதிகாரமற்றதாக மாற்ற பாஜ முயற்சி: ராகுல் குற்றச்சாட்டு

புதுடில்லி: நாட்டின் அரசியல் சூழ்நிலையை கண்டும், பலம் குறைந்து வரும் பயத்தில் நாட்டின் அரசியல் வரைபடத்தை மாற்றவும், தென் மாநிலங்களை அதிகாரம் அற்றதாக மாற்றவும் பாஜ முயற்சி செய்கிறது என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

பறிப்பு

மகளிர் ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை குறித்து லோக்சபாவில் ராகுல் பேசியதாவது: உண்மையில் இம்மசோதா மகளிர் இடஒதுக்கீடு மசோதா கிடையாது. இம்மசோதா பெண்களுக்கு அதிகாரம் அளிக்காது. இந்தியாவின் தேர்தல் வரைபடத்தை மாற்றும் முயற்சி ஆகும். இது அவமானத்திற்குரிய சட்டம். இந்திய சமூகம், தாழ்த்தப்பட்டவர்கள், ஓபிசி பிரிவினர்கள் மற்றும் பெண்களை எப்படி கையாண்டது என்பது வரலாற்று ஆவணம். தற்போது இங்கு நடப்பது ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மாற்றும் வகையில் உள்ளது. ஓபிசி பிரிவினருக்கு அதிகாரம் அளிப்பதையும், பிரதிநிதித்துவம் கொடுப்பதையும் தவிர்க்கும் வகையிலும், அவர்களின் அதிகாரத்தை பறிக்கும் வகையிலும் உள்ளது.

முயற்சி

ஜாதிவாரி கணக்கெடுப்பு துவங்கிவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகிறார். ஆனால், திருப்பி திருப்பி புத்திசாலித்தனமாக வீடுகளில் ஜாதி இல்லை என்கிறார். பார்லிமென்ட் மற்றும் மாநில சட்டசபைகளில் ஜாதி வாரிகணக்கெடுப்பு அடிப்படையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படுமா என்பது முக்கியமான கேள்வி. அடுத்த 15 ஆண்டுகளுக்கும் ஜாதி வாரி அடிப்படையில் பிரதிநிதித்துவம் கிடைப்பதை தடுக்கும் முயற்சியாக இப்போது நடக்கிறது.

எனக்கும், பிரதமர் மோடிக்கும் மனைவி சார்ந்த பிரச்னைகள் இல்லை. ஆனால், நமது தாயார்கள் மற்றும் சகோதரிகளிடம் இருந்து கற்க வேண்டும். பாஜ ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக தென், வடகிழக்கு உள்ளிட்ட மற்ற மாநிலங்களிடம், உங்களின் பங்களிப்பை எடுத்துக் கொள்ளப்போவதாக சொல்கிறீர்கள்.

அரசு செய்வது தேச விரோத செயல். இதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் இதனை தோற்கடிக்கும். இந்தியாவில் தெற்கு வடகிழக்கு மற்றும் சிறிய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை யாராலும் தொட முடியாது என அவர்களுக்கு நான் உறுதி அளிக்கிறேன்.

நாட்டில் நிலவும் அரசியல் சூழலைக் கண்டு பயந்தும், உங்கள் பலம் குறைந்து வருவதை கண்டு பயந்தும், இந்திய அரசியல் வரைபடத்தை மாற்றியமைக்க பாஜ முயற்சி செய்கிறது. அசாம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் இதனை செய்தீர்கள். இப்போது தேசிய அளவிலும் இதனை செய்துவிட முடியும் என கற்பனை செய்து கொண்டுள்ளீர்கள். ஆனால், அதைச் செய்வதற்கு உங்களுக்கு ஒரு அரசியலமைப்புத் திருத்தம் தேவைப்படும்.

மகளிர் இட ஒதுக்கீடு என்ற போர்வையில் தொகுதி மறுவரையறை வருகிறது. மசோதா நிறைவேறாது என பாஜவுக்கே தெரியும். இருப்பினும் பதற்றத்தால் மசோதாவை தாக்கல் செய்தீர்கள். தான் பெண்களுக்கு ஆதரவானவர் என்பதை காட்ட பிரதமர் இம்மசோதாவை கொண்டு வந்துள்ளார்.

மேஜிக் ஷோ நடத்தும் வித்தைக்காரர் ஒரு தவறு செய்தால் அனைவரும் சிரிப்பர். தென் மாநிலங்களை அதிகாரம் அற்றதாக மாற்ற பாஜ முயற்சிக்கிறது. தென் மாநிலங்கள் கவலைப்பட வேண்டாம். இம்மசோதா ஒரு போதும் நிறைவேறாது. அரசமைப்பை விட மனுஸ்மிருதியே பாஜவுக்கு முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.

எதிர்ப்பு

பிரதமர் மோடியை ராகுல் விமர்சித்ததற்கு பாஜ எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டதுடன், அவர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தினர்.

Source link