கோயில் நிலத்திலுள்ள ஈ.வெ.ரா., சிலையை அகற்ற வழக்கு; உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு  

மதுரை: தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்திலுள்ள ஈ.வெ.ரா., சிலையை அகற்ற தாக்கலான வழக்கில்,‛ அது சர்க்கார் புறம்போக்கு’ என வகைப்படுத்தப்பட்ட சர்வே எண்ணில் அமைந்துள்ளது. ‘அ’ பதிவேடு, அடங்கலில் ‘கோயில்’ என பதிவு செய்யப்பட்டுள்ளது,’ என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்தார். நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

மதுரை மாவட்டம் எழுமலை ராம.ரவிக்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு: கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர் கோயில் முன்பகுதில் அதற்கு சொந்தமான நிலம் உள்ளது. அறநிலையத்துறையின் அனுமதியின்றி ஈ.வெ.ரா., சிலை நிறுவப்பட்டுள்ளது. இது பக்தர்களின் மத உணர்வை அவமதிக்கும் வகையில் உள்ளது.

சட்டவிரோதமாக நிறுவப்பட்டுள்ள ஈ.வெ.ரா., சிலை, கம்யூனிஸ்ட் கொடிக் கம்பத்தை அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பிலிருந்து கோயில் நிலத்தை பாதுகாக்க வலியுறுத்தி அறநிலையத்துறை முதன்மை செயலர், கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

ஏற்கனவே விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, ‛சிலை கோயில் நுழைவுவாயிலில், கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் அமைந்துள்ளதா, எந்த இடத்தில் அமைந்துள்ளது என்பதை ஆய்வு செய்யும் பணியில் திருவையாறு தாசில்தாரை கலெக்டர் ஈடுபடுத்த வேண்டும். அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,’ என உத்தரவிட்டது.

நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது. தஞ்சாவூர் மாவட்ட தி.க., தலைவர் அமர்சிங் தன்னையும் இவ்வழக்கில் ஒரு தரப்பாக சேர்த்து கருத்தை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனு செய்தார்.

*சர்க்கார் புறம்போக்கு நிலம்:கலெக்டர் தாக்கல் செய்த அறிக்கை: திருவையாறு தாசில்தாருடன் இணைந்து ஆய்வு செய்தேன். கண்டியூரில் ‘சர்க்கார் புறம்போக்கு’ என வகைப்படுத்தப்பட்ட சர்வே எண்ணில் சிலை அமைந்துள்ளது. கிராம கணக்குகளான ‘அ’ பதிவேடு மற்றும் அடங்கல் குறிப்புரை பகுதியில் ‘கோயில்’ எனவும் ‛பிரம்மசிரகண்டீஸ்வரர் கோயில்’ என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அச்சிலை 1990ல் சாலையோரத்தில் நிறுவப்பட்டது. ஏழு ஆண்டுகளுக்கு முன் சாலை விரிவாக்கப் பணியின்போது ​​சிலை இடமாற்றம் செய்யப்பட்டு, தற்போதுள்ள இடத்தில் அமைக்கப்பட்டது. ​​கண்டியூர் ஊராட்சி வெள்ளாளர் தெரு கிளை நுாலகம் அருகில் சிலையை இடமாற்றம் செய்ய தி.க.,வை சேர்ந்த ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். அது ஊராட்சிக்கு சொந்தமான பொது இடம்.

*பொது இடத்திற்கு மாற்ற முடியாது: உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவுகளின்படி சிலைகள், கொடிக்கம்பங்கள், நினைவுச் சின்னங்களை எந்த ஒரு பொது இடத்திலும் இடமாற்றம் செய்து நிறுவ முடியாது.

கோயிலுக்கு வெளியே அச்சிலையை நிறுவ மாற்று இடம் இல்லை. தி.க.,வினர் அச்சிலையை அவர்கள் விரும்பும் தனியார் நிலத்திற்கு இடமாற்றம் செய்ய முன்வர சம்மதம் தெரிவிக்கவில்லை. இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அக்.,7 க்கு ஒத்திவைத்தனர்.

Source link