தொழில்நுட்ப கோளாறுகளை தடுக்க புதிய ஏற்பாடு; மின் உபகரணங்களை மாற்ற ரயில்வே வாரியம் உத்தரவு

சென்னை: ‘தொழில்நுட்பக் கோளாறுகளால், ரயில்கள் தாமதம் ஏற்படுவதை தடுக்க, பழைய உயர் மின்பாதை கம்பிகளை நீக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, ரயில்வே வாரியம், அனைத்து மண்டலப் பொது மேலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

ரயில்வே பாதுகாப்பு குறித்து, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில், சமீபத்தில் டில்லியில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இது குறித்து, தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜாபர் அலி கூறியதாவது:

இந்த மாதம் இறுதியிலே, பண்டிகை காலம் தொடங்கி விடுகிறது. எனவே, பயணியர் நெரிசலுக்கு ஏற்ப, பண்டிகை காலங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கவும், பாதுகாப்பாக ரயில்களை இயக்கவும், ரயில்வே அமைச்சகம் அனைத்து மண்டலங்களுக்கும் அறிவுறுத்தி உள்ளது.

அதைத்தொடர்ந்து, நெரிசல் மிக்க வழித்தடங்களில் செல்லும் ரயில்களில், கூடுதல் பெட்டிகள் இணைக்கவும், கூடுதல் ரயில்கள் இயக்கவும், ஏற்பாடு செய்ய வேண்டும்.

‘சிக்னல்’ தொடர்பான தொழில்நுட்ப குறைபாடுகளை, விரைந்து கண்டறிந்து, அவற்றை சரி செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், பழைய உயர் மின்பாதை கம்பிகள் உள்ளிட்ட மின் உபகரணங்களை, படிப்படியாக அகற்ற வேண்டும். உடனடி தீர்வாக, போதிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

ரயில்வே பணிமனைகளில் பராமரிப்பு தரத்தை மேம்படுத்தவும், பெட்டிகளில் தீ பாதுகாப்பு தொடர்புடைய, மின் சுற்றுகள் மற்றும் ஒயரிங் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என, ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link