கோல்கட்டா:கோல்கட்டாவை அழகாக்கும் முயற்சியாக சாலையில் எச்சில் துப்புபவர்களுக்கும், சிறுநீர் கழிப்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என மேற்கு வங்க மாநில அரசு தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக நகர்ப்புற வளர்ச்சிமற்றும் நகராட்சி விவகாரத்தறை அமைச்சர் அக்னிமித்ரா பால் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: கோல்கட்டா உள்ளிட்ட நகரங்களை தூய்மை ஆக்கும் வகையில் பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களிடம் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.குப்பை கொட்டுபவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
திறந்த வெளியில் சிறுநீர் அல்லது மலம் கழித்தால் ரூ.200ம், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்படுத்துபவர்களுக்கு 200 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.அரசின் கஜானாவை நிரப்புவதை விட மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறோம். வெறும் அபராதம் மட்டும் விதித்து மக்களிடம் பணத்தை பறிக்க விரும்பவில்லை.
மாநிலத்தில் கோல்கட்டா உள்ளிட்ட நகரங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என விரும்புகிறோம். அரசு மட்டும் நகரத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள முடியாது. மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்படுத்தாமல் அது சாத்தியம் இல்லை. இந்த நகரம் தங்களுக்கு சொந்தமானது என மக்கள் உணர வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் 10 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இது எனது நகரம், எனது மாநிலம் அசுத்தம் செய்ய மாட்டேன் என மக்கள் எண்ண வேண்டும். இதனை தான் நாங்கள் விரும்புகிறோம். அடுத்தாண்டு முதல் மாற்றம் ஏற்படும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
