டாக்டர்களை தாக்குபவர்களுக்கு ஜாமின் பெற தகுதியில்லை: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

-சிறப்பு நிருபர்-

மஹாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள நகராட்சி மருத்துவமனையில், கர்ப்பிணிப் பெண்ணுக்குச் சிகிச்சை தாமதமானதாகக் கூறி சிவசேனா கவுன்சிலர் ரமேஷ் மத்ரே தலைமையிலான கும்பல், பெண் மருத்துவர் உட்பட மருத்துவமனை ஊழியர்களைக் கடந்த ஜூலை மாதம் கொடூரமாகத் தாக்கியது.

இந்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ரமேஷ் மத்ரேவுக்கு விசாரணை நீதிமன்றம் முதலில் ஜாமின் வழங்கியது.

இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மும்பை உயர் நீதிமன்றம், ஜாமினுக்குத் தடை விதித்ததுடன் ரமேஷ் மத்ரேவைச் சரணடைய உத்தரவிட்டது.

இருப்பினும், ஆகஸ்ட் 7-ல் இந்த வழக்கை மீண்டும் விசாரித்த உயர் நீதிமன்றம், ரமேஷ் மத்ரே மற்றும் அவருடன் கைது செய்யப்பட்ட மூவருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமின் வழங்கியது. உயர் நீதிமன்றம் விதித்த ஜாமின் நிபந்தனைகளுக்கு எதிராக ரமேஷ் மத்ரே, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இம்மனு நீதிபதிகள் விக்ரம் நாத், அகஸ்டின் ஜார்ஜ் மாசி மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மருத்துவத் துறையினரை மதிக்காதவர்கள் ஜாமின் உட்பட எந்தவொரு நிவாரணத்தையும் பெறத் தகுதியற்றவர்கள். மருத்துவமனைக்குள் புகுந்து யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என நினைக்கிறீர்களா? இந்த சம்பவத்தில் உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து ஜாமினுக்குத் தடை விதித்தது முற்றிலும் சரியானது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அப்போது குறுக்கிட்ட மஹாராஷ்டிரா அரசு தரப்பு வழக்கறிஞர், ‘குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கியதை எதிர்த்து மஹாராஷ்டிர அரசு சார்பில் விரைவில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும்’ என, தெரிவித்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவின் விசாரணையை செப்., 7-க்கு ஒத்திவைத்தனர்.

Source link