கோவிலின் 3.93 ஏக்கர் நிலத்தை மீட்கும் ஐகோர்ட் உத்தரவை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்

– சிறப்பு நிருபர் –

தமிழகத்தின் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு அண்ணாமலைநாதர் திருக்கோவிலுக்குச் சொந்தமான, 3.93 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள அருள்மிகு அண்ணாமலைநாதர் திருக்கோவிலுக்குச் சொந்தமான 3.93 ஏக்கர் நிலம் தொடர்பான சட்டப் போராட்டம், 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

கடந்த 1994ல் அண்ணாமலைநாதர் கோவிலுக்குச் சொந்தமான 3.93 ஏக்கர் நிலத்தை, பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய, தமிழகத்தின் கோவில் நிர்வாக வாரியம் அனுமதி அளித்தது. இதற்கான அடிப்படை விலை, 3.10 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.

கடந்த, 1995, ஜூன் 19ல் நடைபெற்ற பொது ஏலத்தில் 5 பேர் பங்கேற்றனர். இதில் அன்றைய பரம்பரை அறங்காவலர் வி. சுப்பிரமணிய அய்யரின் அண்ணன் மகனான ஆர். சுப்பிரமணியன் என்பவர், 10.17 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்.

இதைத் தொடர்ந்து, 1997ல், தமிழக அரசின் ஹிந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1959, பிரிவு 34-ன் கீழ் பொதுமக்களின் ஆட்சேபனைகளை கேட்காமல் ஏலம் நடத்தப்பட்டதும், ஏலத் தொகை சந்தை மதிப்பை விட மிகக் குறைவாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்த அன்றைய அறநிலையத்துறை ஆணையர் இந்த ஏலத்தை ரத்து செய்தார்.

இருப்பினும், 2002ல் சிறப்பு அரசாணை மூலம் இந்த விற்பனையை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது.

ஏலதாரர் ஆர். சுப்பிரமணியன் 2004ல் இந்த நிலத்தை, 13 பேருக்கு விற்பனை செய்தார். அவர்கள் நிலத்தை மனைப் பிரிவுகளாக பிரித்து, 100-க்கும் மேற்பட்டோருக்கு விற்றனர். இதில் பெரும்பாலான இடங்களில் குடியிருப்பு வீடுகளும், உள்ளூர் முஸ்லிம் ஜமாத் சார்பில் ஒரு பள்ளிவாசல் மற்றும் அரபிக் கல்லுாரியும் கட்டப்பட்டன.

நீதிமன்ற ஆவணங்களின்படி, இந்த நிலத்தை சுற்றியுள்ள பகுதிகள் பெரும்பாலும் முஸ்லிம் சமூக மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளாக மாறியிருந்தன.

கோவில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதை அடுத்து, அறநிலையத்துறைச் சட்டம் பிரிவு 78-ன் கீழ் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி, இங்கு 83 ஆக்கிரமிப்பாளர்கள் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்கள் அனைவரையும் வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

முதற்கட்டமாக 81 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, கோவிலின் வாடகைதாரர்களாக மாறுவது அல்லது இடத்தை விட்டு வெளியேறுவது என்ற இரு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. 81 ஆக்கிரமிப்பாளர்களும் வாடகைதாரர்களாக மாற சம்மதித்ததால், பிரிவு 34A-ன் கீழ் வாடகை நிர்ணயம் செய்யும் பணி தொடங்கப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் என். செந்தில்குமார் அடங்கிய அமர்வு, ‘ஆரம்பத்தில் நடத்தப்பட்ட பொது ஏலமே, சட்டரீதியான நடைமுறைகளைப் பின்பற்றாமலும், அன்றைய அறங்காவலரின் கூட்டுச் சதியினால் நடந்த கறைபடிந்த நடவடிக்கையாகும். முறைசாரா நில பரிமாற்றத்தால் உருவான தனிநபர்களின் நலன்களை விட, திருக்கோவில் மற்றும் இறைவனின் நலன்களே முதன்மையானவை மற்றும் மேலோங்கி நிற்க வேண்டும்’ என, உத்தரவிட்டது. ஆக்கிரமிப்புகளை மீட்கவும் உத்தரவிட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஆக்கிரமிப்பாளர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஹுசேபா அகமதி மற்றும் சஞ்சய் ஹெக்டே ஆஜராகி வாதிட்டனர்.

எதிர்மனுதாரர்களான கோவில் மற்றும் அறநிலையத்துறை சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ். வைத்யநாதன், தாமா சேஷாத்ரி நாயுடு வி. சித்ராம்பரேஷ் ஆகியோருடன் வழக்கறிஞர்கள் ஜி. பாலாஜி, நிரஞ்சன் ராஜகோபாலன், அபினவ் பார்த்தசாரதி, என்.சி. விஷால் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் பஞ்சோலி அடங்கிய அமர்வு, ‘சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட எந்தவொரு முகாந்திரமும் இல்லை’ எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.

இதன் மூலம் கடையநல்லூர் அண்ணாமலைநாதர் கோவிலுக்குச் சொந்தமான, 3.93 ஏக்கர் நிலத்தை மீட்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவும், அறநிலையத்துறையின் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளும் முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளன.

Source link