சாட்டிலைட் ரிங் ரோட்டில் சர்வீஸ் சாலை; ரூ.198 கோடிக்கு மத்திய அரசு டெண்டர்

ஓசூர்: தமிழக எல்லை வழியாக செல்லும் சாட்டிலைட் டவுன் ரிங் ரோட்டில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு சர்வீஸ் சாலை அமைக்க டெண்டர் விட்டுள்ளது.

கர்நாடகா – தமிழகம் இடையே சாட்டிலைட் டவுன் ரிங் ரோடு அமைக்கப்படுகிறது. தமிழக எல்லையில் உள்ள, 25 கிராமங்கள் வழியாக, 45 கி.மீ., துாரம் சாலை செல்கிறது. வழக்கமாக தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்படுவது போல, சர்வீஸ் சாலை அமைக்கப்படாது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் சாலையோர விவசாய நிலங்களிலிருந்து, விளை பொருட்களை எடுத்து செல்ல முடியாத நிலை உருவானது. எனவே, சர்வீஸ் சாலை அமைத்து தர, மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம், ஓசூர் பகுதி விவசாயிகள் வலியுறுத்தினர். அவரும் சர்வீஸ் சாலை அமைக்கப்படும் என உறுதியளித்திருந்தார். ஆனால் சர்வீஸ் சாலைக்கு, நிதி ஒதுக்கி டெண்டர் விடாமல் காலம் தாழ்த்தப்பட்டது.

சாட்டிலைட் டவுன் ரிங் ரோடு பணி, 90 சதவீதத்திற்கு மேல், முடிந்து விட்டதால், உடனடியாக சர்வீஸ் சாலைக்கு நிதி ஒதுக்கி டெண்டர் விட, அதிமுக எம்பி தம்பிதுரை, முன்னாள் எம்பி நரசிம்மன் ஆகியோர் மூலமாக விவசாயிகள் வலியுறுத்தினர்.

அதையேற்று, தமிழக எல்லையான தேவீரப்பள்ளியிலிருந்து, எஸ்.முதுகானப்பள்ளி வரை, 35 கி.மீ., துாரத்திற்கு முதல்கட்டமாக சர்வீஸ் சாலை அமைக்க மத்திய அரசு, 198 கோடி ரூபாயை ஒதுக்கி கடந்த, 3ம் தேதி டெண்டர் விட்டுள்ளது.

அடுத்த மாதம், 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்க நிறுவனங்களை அழைத்துள்ளது. எஸ்.முதுகானப்பள்ளியிலிருந்து, தமிழக எல்லையான சாத்தனுார் வரை மீதி, 10 கி.மீ., துாரத்திற்கு சர்வீஸ் சாலை அமைக்க, தனியாக டெண்டர் விடப்படும் என, தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘மத்திய அரசு சர்வீஸ் சாலைக்கு, டெண்டர் விட்டுள்ளதை வரவேற்கிறோம். அதே நேரத்தில், சாட்டிலைட் டவுன் ரிங்ரோட்டிற்காக, கர்நாடகாவில் கையகப்படுத்திய நிலத்திற்கு ஏக்கருக்கு, 6 கோடி ரூபாயும், தமிழக எல்லையில், 10 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு நிலத்தின் மதிப்பை உயர்த்தி காட்டினால், இழப்பீடு வழங்க தயாராக இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. அதனால் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Source link