நாட்டின் வளர்ச்சி பயணத்திற்கு 'தினமலர்' ஒரு சாட்சி; பிரதமர் மோடி புகழாரம்

சென்னை: நாட்டின் வளர்ச்சி பயணத்திற்கு ‘தினமலர்’ ஒரு சாட்சி என பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

‘தினமலர்’ நாளிதழ் பவள விழாவை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிய வாழ்த்து செய்தி: ‘தினமலர்’ நாளிதழ் 75 ஆண்டு கால சேவையை நிறைவு செய்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில், ‘தினமலர்’ நாளிதழுடன் தொடர்புடைய அனைவருக்கும், அதன் வாசகர்களுக்கும், என் நல்வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். பவள விழாவை குறிக்கும் வகையில், நினைவு தபால் தலை வெளியிடப்படுவது, இந்த கொண்டாட்டத்தின் சிறப்பை மேலும் கூட்டுகிறது.

நம் சமூகத்தில், ஊடகங்களுக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. சமூக, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் வாயிலாக, ஊடகங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி, மக்களின் பங்கேற்பை ஊக்குவிக்கின்றன. பல தசாப்தங்களாக சமூகத்திற்கு சேவை செய்து வரும் ‘தினமலர்’ நாளிதழ், நாட்டின் வளர்ச்சிப் பயணத்தைக் கண்டுள்ளதுடன், ஒரு சாட்சியாக, பங்கேற்பாளராக, அந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளது.

இந்தியாவின் மொழிகளையும், மரபுசார் அறிவுகளையும் பேணிப் பாதுகாப்பதிலும், பரப்புவதிலும், ஊடகங்களுக்கு பங்கு உண்டு. நம் செழுமையான பாரம்பரியத்தில், தமிழுக்குத் தனி இடம் உண்டு. ஞானம் நிறைந்த அதன் இலக்கியங்கள், இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லப்பட வேண்டும். இதன் வழியாக அவர்கள் அதை அனுபவிப்பதுடன், இந்த வளமான பாரம்பரியத்தை, மேலும் செழுமைப்படுத்த பங்காற்ற முடியும்.

‘தினமலர்’ போன்ற பத்திரிகைகள், இந்த உன்னதமான பணியில் ஆற்றலை பன்மடங்கு பெருக்கும் சக்தியாக திகழ்கின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக துாய்மை இயக்கம், ‘டிஜிட்டல்’ பரிவர்த்தனைகள், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழியைத் தவிர்த்தல் போன்ற பல முக்கியமான திட்டங்கள், மக்கள் இயக்கங்களாக உருவெடுத்துள்ளன.

இந்த முன்னேற்றப் பயணத்தில், ஊடகங்கள் நேர்மறையான மாற்றங்களுக்கு உதவியுள்ளன. வரும் 2047க்குள், ‘வளர்ச்சியடைந்த இந்தியா’வை உருவாக்க, நம் நாடு உறுதி பூண்டுள்ளது. இந்த தருணத்தில் இந்த எண்ணம் இன்னும் மிக முக்கியமானது.

‘தினமலர்’ நாளிதழைச் சேர்ந்த அனைவரும், இந்த இலக்கிற்கு தொடர்ந்து ஊக்கமளிப்பர் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ‘பவள விழா’ என்பது, 75 ஆண்டு கால சேவையை பெருமையுடன் திரும்பிப் பார்ப்பதற்கும், புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்புடன் எதிர்காலத்தை நோக்குவதற்குமான ஒரு தருணம்.

‘தினமலர்’ நாளிதழ், சமூகத்துடன் தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருக்கவும், வரவிருக்கும் ஆண்டுகளில் பொது உரையாடல்களுக்கு தன் பங்களிப்பை தொடர்ந்து வழங்கவும் வாழ்த்துகிறேன். இந்த சிறப்புமிக்க தருணத்தில், ‘தினமலர்’ நாளிதழுடன் தொடர்புடைய அனைவருக்கும், அதன் வாசகர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நல்வாழ்த்துகள் .இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source link