பட்டிமன்ற நடுவரும், தமிழ்ப் பேராசிரியரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையா (வயது 90) வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (11.09.2026) காலமானார். இவரது மறைவுக்குப் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சாலமன் பாப்பையா மறைவுக்கு மக்கள் சிந்தனைப் பேரவை இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் மூலைமுடுக்கெங்கும் தமிழ் மொழியையும் தமிழ் உணர்வினையும் அறுபதாண்டுகளுக்கும் மேல் தனது அயராத உழைப்பாலும் தொடர் பயணங்களாலும் எளிய விதத்தில் எடுத்துச் சென்ற பெருமதிப்பிற்குரிய தமிழ் ஆளுமை சாலமன் பாப்பையா. உலகெங்கும் உள்ள தமிழர்களின் உள்ளங்களில் தமிழை உரக்க ஒலிக்கச் செய்த தமிழறிஞர், சொற்பொழிவாளர், பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவு அதிர்ச்சியளிப்பதாகும்.
தொண்ணூறு வயதிலும் தோய்ந்து போகாமல் என்றும் போல இயங்கி வந்த அன்னாரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். கடந்த கால் நூற்றாண்டு காலமாக மக்கள் சிந்தனைப் பேரவையின் பல நிகழ்வுகளில் பங்கேற்று பேரவையின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்புச் செய்தவரும், மக்கள் சிந்தனைப் பேரவையின் மதுரை மாவட்ட நெறியாளருமான தகைசால் தமிழ் அறிஞர் சாலமன் பாப்பையாவின் மறைவிற்கு மக்கள் சிந்தனைப் பேரவை ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தார்க்கும் குழுவினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
