திருச்சியில் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்… 300-க்கும் மேற்பட்ட கிளைகள் மூடல்; ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு

திருச்சி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தால், 300-க்கும் மேற்பட்ட வங்கி கிளைகளில் வழக்கமான பணிகள் முடங்கின. வாடிக்கையாளர்களுக்கான பணப்பரிவர்த்தனை, காசோலை பரிமாற்றம், வைப்பு மற்றும் பணம் எடுத்தல் உள்ளிட்ட நேரடி வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். வங்கி மேலாளர்கள் முதல் அலுவலர்கள், ஊழியர்கள் வரை பெரும்பாலானோர் போராட்டத்தில் பங்கேற்றதால், பல தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளைகள் நாள் முழுவதும் மூடப்பட்டிருந்தன.

வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்பதும் உள்ளது. தற்போது மாதத்தில் இரண்டு சனிக்கிழமைகள் விடுமுறையாகவும், இரண்டு சனிக்கிழமைகள் வேலை நாட்களாகவும் உள்ள நிலையில், அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறை நாட்களாக அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். இதற்காக கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கையெழுத்தான இருதரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, புதிதாக வங்கிப் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு பிரீமியம் தொகையை வங்கிகளே முழுமையாக ஏற்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். ஓய்வுக்குப் பிறகு மருத்துவச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ காப்பீட்டு பிரீமியம் தொடர்பான சுமையை ஓய்வுபெற்ற ஊழியர்களிடம் இருந்து குறைக்க வேண்டும் என்பதும் அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்திலும் வங்கி பணியாளர்கள் பெருமளவில் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் வழக்கமான வங்கி பணிகள் நடைபெறாமல், கிளைகளுக்கு வந்த வாடிக்கையாளர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

திருச்சியில் உள்ள ஸ்டேட் பேங்க் மண்டல அலுவலகம் முன்பு 300-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிய அவர்கள், இருதரப்பு ஒப்பந்தத்தில் ஏற்கப்பட்ட அம்சங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதாக குற்றம்சாட்டினர். குறிப்பாக அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்குவது தொடர்பான முடிவை விரைந்து அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

வேலைநிறுத்தம் காரணமாக வங்கிகளின் நேரடி சேவைகள் பாதிக்கப்பட்டாலும், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள இணைய வங்கி மற்றும் சில டிஜிட்டல் பரிவர்த்தனை சேவைகள் வழக்கம்போல் இயங்கியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், வங்கி கிளைகளில் நேரடியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் வாடிக்கையாளர் சேவைகள் பாதிக்கப்பட்டதால், அதன் தாக்கம் வணிக நடவடிக்கைகளிலும் எதிரொலித்தது.

இந்நிலையில், இந்த ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் திருச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் ரூ.100 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளைகள் மூடப்பட்டிருந்ததால், பணப்பரிவர்த்தனை மற்றும் வங்கி சார்ந்த வர்த்தக நடவடிக்கைகள் கணிசமாக பாதிக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.

வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள சேவை பாதிப்பைத் தொடர்ந்து, தங்களது கோரிக்கைகள் தொடர்பாக அரசு மற்றும் வங்கி நிர்வாகங்கள் விரைந்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. குறிப்பாக வாரத்தில் 5 நாட்கள் வேலை, பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு பிரீமியம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

செய்தி – க.சண்முகவடிவேல்

Source link