வேலூர்: மிசா சட்டத்தில் சிறையில் இருந்த போது ஸ்டாலினுக்கு விழ வேண்டிய அடி, சிட்டிபாபுவுக்கு விழுந்ததால் அவர் அங்கேயே உயிரிழந்தார் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை துரைமுருகன் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், மிசாவையே கொச்சைப்படுத்தி முதல்வர் விஜய் சட்டசபையில் பேசியதுதான் அனைத்து தரப்பினருக்கும் கடுப்பை ஏற்படுத்திவிட்டது.
மிசாவில் கைதான ஸ்டாலினை முதல்வர் விஜய் ஒரு சைகை காட்டி பேசினாரே, அதை எல்லாருமே கண்டித்துள்ளனர். எனது அரசியல் வாழ்வில் ஒரு முதலமைச்சர், சட்டசபையில் பேசிய பேச்சுக்கு சர்வ கட்சியினரும் கண்டனம் தெரிவிக்கும் நிகழ்வு, இதுதான் தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக நடந்திருக்கிறது.
ஸ்டாலின் மிசாவில் கைதானாரா என்பதை அவருடன் சிறையில் இருந்தவர்கள் எல்லாம் சொல்லிவிட்டார்கள். சிறையில் இருந்த போது ஸ்டாலின் அடிப்பட்டு, உதைப்பட்டு இறந்து போய்விடுவார் என்ற நிலை வந்த போதுதான், கட்டுக்காவலை மீறி எகிறி குதித்து, எம்பி சிட்டிபாபு, ஸ்டாலின் மீது விழுந்துவிட்டார்.
அப்போது ஸ்டாலினுக்கு விழ வேண்டிய அடியெல்லாம் சிட்டிபாபு மீது விழுந்ததில் அவர் அங்கேயே இறந்துவிட்டார். சிட்டிபாபு மட்டும் அவரது மீது விழாமல் இருந்திருந்தால் ஸ்டாலின் இறந்திருப்பார்.
மிசா காலத்தில் அனைவரும் இத்தனை பெரிய தியாகத்தை செய்துள்ளனர். அந்த கால கட்டத்தில் ஸ்டாலினுக்கு போலீஸ் நிலையத்திற்கு கூட போய் பழக்கமில்லை. அவர் மீது எந்த வழக்கும் இல்லை. ஏதோ அடிக்குற காத்துல இலைகள் எல்லாம் கோபுரத்தில் போய் ஒட்டிக் கொள்வது போல் ஒட்டவைத்துவிட்டது, அதன் விளைவு கண் மண் தெரியாமல் விஜய் பேசியிருக்கிறார். அதனால்தான் திமுக இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
அது போல் சர்காரியா கமிஷன் குறித்து பேசியதும் மாறன் குறித்தும் பேசியதும் எல்லாமே குற்றச்சாட்டுகள்தான், எதுவும் நிரூபிக்கப்படவில்லை என துரைமுருகன் பேசினார்.
தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவர் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சர் விஜய் மோசமான உடல் மொழியுடன் பேசியதாக கூறி, அதனை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த கட்சி தலைமை அறிவுறுத்தியது.
மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதானதற்கான Detention copy யாரிடமாவது உள்ளதா, அதற்கான ஆதாரம் இருந்தால் வெளியிட வேண்டும் என மதுரையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் டீடென்ஷன் காப்பி இல்லாத தியாகியா ஸ்டாலின் என்றும் கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக ஆர்ப்பாட்டத்தில் தவெக அமைச்சர்களை முன்னாள் அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். நிர்மல் குமாரை திமுக எம்பி ஆ.ராசா ஒருமையில் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார்.
