“சுதந்திர இந்தியாவில் முதல் பேருந்து” – அமைச்சர் வன்னி அரசு நெகிழ்ச்சி!

இந்தியா தனது 80வது சுதந்திர தினத்தை இந்த ஆண்டு நிறைவு செய்து, 81வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள வேளையில், ஒரு கிராமத்தின் நீண்ட காலக் கனவு நனவாகியுள்ளது. சமூகநீதித்துறை அமைச்சரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான வன்னி அரசுவின் சொந்த கிராமமான அயன்ரெட்டியபட்டிக்கு, சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக இன்று (13.09.2026) அரசுப் பேருந்து வசதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் “சுதந்திர இந்தியாவில் முதல் பேருந்து” எனக் குறிப்பிட்டு வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியா தனது 80வது சுதந்திர தினத்தை இந்த ஆண்டு கொண்டாடி, 81வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. நான் பிறந்த கிராமமான அயன்ரெட்டியபட்டிக்கு இன்று (13.09.26) தான் சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக அரசு பேருந்து வசதி கிடைத்துள்ளது.

எமது கிராமத்தின் சமூக நல்லிணக்கத்திற்கு அடையாளமாக, அனைத்து சமூக பெரியவர்களும், மக்களும் இணைந்து பூக்கள் தூவி, கொடி அசைத்து பேருந்தை வசதியை தொடங்கி வைத்தோம். இன்னுமொரு விடுதலை கிடைத்த உணர்வுடன் மக்கள் இதை கொண்டாடினர். “நம்ம ஊருக்கு நீ ஏதாச்சு செய்யணும்பா” என்று எமது அய்யாவும், அம்மாவும் எப்போதும் என்னிடம் சொல்வார்கள். அவர்கள் இருவரும் இல்லாத இந்த நாளில், எமது மக்கள் வெளிப்படுத்திய மகிழ்ச்சியே பெரும் ஆறுதலாக அமைந்தது. இன்று அவர்களது விருப்பத்தை நிறைவேற்றிய மகிழ்ச்சியுடன் ஊரிலிருந்து கிளம்பினேன்.

எமது கிராமத்துக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபனுக்கும், இன்றைய நாளை சாத்தியமாக்கிய தமிழ்நாடு முதலமைச்சர்  ச. ஜோசப் விஜய்க்கும் எமது கிராம மக்களின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Source link