சூரியவம்சம் படத்தால் சிக்கல்; ஜெயலலிதா பிளாங்க் செக் கொடுத்தும் ஏற்க மறுத்த தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரி; நடந்தது என்ன?

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்றான ‘சூர்யவம்சம்’ படத்தை ஜெயா டிவியில் ஒளிபரப்புவதற்காக முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கிய பிளாங்க் செக்கை, படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி வாங்க மறுத்ததாக இயக்குநர் பாரதி கண்ணன் தெரிவித்துள்ளார்.

‘டூரிங் டாக்கீஸ்’ நிகழ்ச்சியில் பேசிய அவர், சூர்யவம்சம்’ திரைப்படம் வெளியான காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. திரையரங்குகளில் பல வாரங்கள் வெற்றிகரமாக ஓடிய இப்படத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் பார்க்க விரும்பினார். அப்போது ஜெயலலிதா தனது இல்லத்திலேயே திரைப்படங்களைப் பார்ப்பதற்கான வசதியை வைத்திருந்தார். அதனால் அவருக்காக ஒரு கேசட்டில் ‘சூர்யவம்சம்’ திரைப்படத்தைப் பதிவு செய்து கொடுது்தனர்.

படத்தைப் பார்த்த ஜெயலலிதாவுக்கு அது மிகவும் பிடித்துப்போனது. இதையடுத்து, அந்தப் படத்தை ஜெயா டிவியில் ஒளிபரப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்போது 40 நாட்களில் ஜெயா டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டதும் விநியோகஸ்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் பரபரப்பு அதிகமான நிலையில், படத்தின் நாயகன் சரத்குமார் அப்போது அ.தி.மு.க.வில் இருந்ததால், அவர் ஜெயலலதா அம்மாவிடம் சென்று, இது குறித்து எடுத்து கூறியுள்ளார். 

சரத்குமாரின் பேச்சை கேட்ட அவர், இப்படி நடக்கும் என்று எனக்கு தெரியாது. படம் வெளியாகி 40 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதனால் தான் ஒளிபரப்ப சொன்னேன். இதற்கு என்ன நஷ்டம் ஆனதோ அதை கொடுத்துவிடலாம். தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியை வரச்சொல்லுங்க என்று கூறியுள்ளர். அதன்படி, ஆர்.பி.செளத்ரி அங்கு சென்றபோது, ஜெயலலிதா அவரிடம், தனக்கு நடந்த விஷயம் முழுமையாகத் தெரியாது, திரைப்படம் தொடர்பான சில நடவடிக்கைகள் திடீரென நடந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, ஜெயலலிதா தனது மேலாளரை அழைத்து ஒரு பிளாங்க் செக் எடுத்து வர சொல்லி, அதை ஆர்.பி.சௌத்ரியிடம் கொடுத்து, இது எனது தனிப்பட்ட வங்கி கணக்கு, எங்களுக்கு எவ்வளவு நஷ்டம் ஆனதோ அதை நிரப்புங்கள் நான் கையெழுத்து போட்டு தருகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால், ஆர்.பி.செளத்ரி அந்தச் செக்கை வாங்க மறுத்துள்ளார். இல்லை அம்மா, நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன். சமாளித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதை கேட்ட ஜெயலலிதா எப்படி சமாளிப்பீங்க் என்று கேட்க, படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது. ஆனால் லாபத்தில் தான் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அடுத்த படத்தில் கூட இதை நான் சமாளித்துவிடுவேன் என்ற கூறியுள்ளார். எந்தச் சூழ்நிலையிலும் பதற்றமடையாதவர் பிரச்சினைகளை அமைதியாக எதிர்கொள்வார். திரைப்படத் துறையில் பல சவால்களை எதிர்கொண்டபோதும், அவர் எப்போதும் நிதானமாகவும் உறுதியுடனும் செயல்பட்டதாக ஆர்.பி.சௌத்ரி குறித்து பாரதி கண்ணன் கூறியுள்ளார்.

Source link