எழுதியவர்:ஜதின் ஆனந்த் , தாமினி நாத்
கடந்த ஓராண்டாக தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் (SIR) போது தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்களில் இருந்து நாடு முழுவதும் சுமார் 13.37 கோடி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில், மாநிலங்களவையின் இளம் எம்.பி.யான ராகவ் சத்தாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
2022-ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி (AAP) சார்பில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாஜகவில் இணைந்தார். இந்த பெயர் நீக்கம் அரசியல் ரீதியாக இரு தரப்பினருக்கும் இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி அரசு தன் மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக சத்தா குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு பதிலளித்த பஞ்சாப் அரசின் மூத்த அதிகாரி மற்றும் ஆம் ஆத்மி கட்சி, எஸ்.ஐ.ஆர் பணியை தேர்தல் ஆணையமே மேற்கொள்கிறது என்றும், இதில் மாநில அரசுக்கு “எந்தப் பங்கும் இல்லை” என்றும் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் பதிவுகளின்படி, ஆகஸ்ட் 13-ஆம் தேதி வெளியிடப்பட்ட பஞ்சாப் மாநிலத்தின் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பட்டியலில் சத்தாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இது ஏ.எஸ்.டி.டி (ASDD) பட்டியல் எனப்படுகிறது. அதாவது, “இல்லாதவர்கள், இடம் மாறியவர்கள், இறந்தவர்கள் மற்றும் இரட்டைப் பதிவுகள் கொண்ட பட்டியல் ஆகும். இதில் சத்தாவின் பெயருக்கு எதிராக “நிரந்தரமாக இடம் மாறியவர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எஸ்.ஐ.ஆர் பணிக்கு முன்பு பஞ்சாபில் இருந்த மொத்த வாக்காளர்களில் 20.66 லட்சம் பேர், அதாவது 9.7 சதவீதம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சத்தாவும் ஒருவர். பஞ்சாபின் இறுதி எஸ்.ஐ.ஆர் வாக்காளர் பட்டியல் அக்டோபர் 12-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. வரைவு நிலையில் பெயர் நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வாய்ப்பு உள்ளது. இதற்காக ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 12 வரை ஒரு மாத கால அவகாசத்தில் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தெரிவிக்கும் படிவத்தை தாக்கல் செய்யலாம்.
பஞ்சாப் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டது குறித்தும், அதற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்தும் கேட்கப்பட்டபோது சத்தா கூறுகையில், “பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி அரசு தற்போது தனது பழிவாங்கும் அரசியலை வரைவு வாக்காளர் பட்டியலுக்கும் கொண்டு வந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, இவை இறுதி வாக்காளர் பட்டியல்கள் அல்ல; வரைவு பட்டியல்கள் மட்டுமே. இவை தற்காலிகமானவை; மேலும் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் தெரிவிக்கும் நடைமுறைக்கு உட்பட்டவை. எஸ்.ஐ.ஆர் வழிகாட்டுதல்களின் கீழ் வழங்கப்பட்டுள்ள தீர்வு நடவடிக்கைகளைப் பயன்படுத்துவதற்கான பணியை நான் ஏற்கனவே தொடங்கிவிட்டேன். 2026 அக்டோபரில் வெளியிடப்பட உள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் இந்தத் தவறான வகைப்பாடு சரிசெய்யப்படுவதை நான் உறுதி செய்வேன்” என்றார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் தேர்தல் ஆணையம் வெளியிட்ட விரிவான எஸ்.ஐ.ஆர் வழிகாட்டுதல்களில், பொது பிரதிநிதிகளின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததை சத்தா சுட்டிக்காட்டினார். 2025 ஜூன் 24-ஆம் தேதி வெளியிடப்பட்ட விரிவான வழிகாட்டுதல்களின் பத்தி 4(d)-ல், “முன்னதாக தேர்தல் தரவுத்தளத்தில் குறிக்கப்பட்டிருந்த நீதித்துறை உறுப்பினர்கள், பொது பிரதிநிதிகள், அறிவிக்கப்பட்ட பதவிகளை வகிப்பவர்கள் மற்றும் கலை, கலாசாரம், பத்திரிகைத்துறை, விளையாட்டு, பொதுச் சேவை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களின் அனைத்து பெயர்களும் வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும். இதன் மூலம் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் தெரிவிக்கும் காலகட்டத்தில் தேவையான ஆவணங்களையும் சேகரிக்க முடியும்” என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து சத்தா கூறுகையில், நான் பஞ்சாபைச் சேர்ந்த தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர். ஒருவேளை எனது பெயர் ஏற்கெனவே குறிக்கப்பட்டிருந்தாலும், பத்தி 4(d)-ன் படி எனது பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். அந்த அறிவுறுத்தல் கவனிக்கப்படாமல் விடப்படவில்லை; எனது விஷயத்தில் அது வேண்டுமென்றே மீறப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் அரசை நடத்தலாம்; ஆனால் பஞ்சாபின் வரைவு வாக்காளர் பட்டியல் அதன் தனிப்பட்ட சொத்து அல்ல” என்றார்.
பஞ்சாபைச் சேர்ந்த எம்.பி.யாக இருக்கும் நிலையில் தன்னை “இடம் மாறியவர்” என்று குறிப்பிட்டிருப்பது குறித்து அவர் மேலும் கூறுகையில், இது வெறும் எழுத்தர் அல்லது நிர்வாக ரீதியான தவறாகத் தெரியவில்லை. இது அரசியல் பழிவாங்கலின் தெளிவான நிகழ்வு” என்றார்.
சத்தாவின் குற்றச்சாட்டுகளை மறுத்த பஞ்சாப் அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறுகையில், “இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை. இந்த நடவடிக்கையில் பஞ்சாப் அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை. தலைமைத் தேர்தல் அதிகாரி (CEO) என்பவர் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்படும் அதிகாரி” என்றார்.
ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், எஸ்.ஐ.ஆர் பணியை மாநில அரசு அல்ல, தேர்தல் ஆணையமே மேற்கொள்கிறது. எனவே, வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயர் சேர்க்கப்பட வேண்டும் அல்லது நீக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்வதில் பஞ்சாப் அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை. ராகவ் சத்தா பஞ்சாபில் அல்ல, டெல்லியில் வசித்து வருகிறார் என்பது பொதுப் பதிவுகளில் உள்ள தகவல். அவர் இனி பஞ்சாபில் வசிக்கவில்லை என்றால், தனது வாக்காளர் பதிவைத் தொடர்ந்து வைத்திருப்பதா அல்லது வேறு இடத்திற்கு மாற்றுவதா என்பது அவருடைய சொந்தப் பொறுப்பு. தற்போது ஒரு வாக்காளர் பதிவில் இருந்து பெயர் நீக்கப்பட்டதற்காக அவர் ஆம் ஆத்மி கட்சியையோ பஞ்சாப் அரசையோ குறை கூற முடியாது” என்றார்.
1951-ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 3-வது பிரிவின்படி, மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஒரு வேட்பாளர் நாட்டில் உள்ள ஏதேனும் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். 2022-ஆம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தலுக்காக சத்தா தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், டெல்லி ராஜிந்தர் நகரில் உள்ள வாக்குச்சாவடி எண் 52-ல் வாக்களிக்கப் பதிவு செய்திருந்ததாக தெரிவித்திருந்தார். ஆனால், பஞ்சாபில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், சத்தா தனது வாக்காளர் பதிவை அந்த மாநிலத்திற்கு மாற்றினார்.
2024 ஜூன் 1-ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், பஞ்சாபின் எஸ்.ஏ.எஸ் (SAS) நகர் அல்லது மொஹாலியில் உள்ள வாக்குச்சாவடியில் அவர் வாக்களித்தார். புதன்கிழமை தேர்தல் ஆணையத்தின் வோட்டர் சர்வீஸ் போர்ட்டலில் (Voter Services Portal) சத்தாவின் வாக்காளர் அடையாள அட்டை விவரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தேடலில், டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களிலும் “எந்தப் பதிவும் கிடைக்கவில்லை” என்ற தகவல் காட்டப்பட்டது.
டெல்லியின் வரைவு எஸ்.ஐ.ஆர் வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் எஸ்.ஐ.ஆர் பணிக்கு முன்பு இருந்த வாக்காளர் பெயர்களில் 33 சதவீதம் நீக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், ஆம் ஆத்மி கட்சியின் மேலும் ஆறு மாநிலங்களவை எம்.பி.க்கள் பாஜகவில் இணைவதற்கு முன்பு, முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நெருங்கிய உதவியாளர்களில் ஒருவராக இருந்த சத்தா, வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி முன்வைத்த குற்றச்சாட்டுகளில் முன்னணியில் இருந்தார்.
2025-ஆம் ஆண்டு டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து, அப்போது டெல்லி முதல்வராக இருந்த அதிஷி மற்றும் மாநிலங்களவை சக உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோருடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த சத்தா, கெஜ்ரிவால் போட்டியிட்ட புது டெல்லி தொகுதியில் “திட்டமிட்டு, மிகப்பெரிய அளவில் வாக்காளர் மோசடி செய்ய சதி” நடைபெற்றதாக ஆம் ஆத்மி கட்சி கூறிய குற்றச்சாட்டு குறித்து கவலை தெரிவித்திருந்தார். இது தேர்தல் முடிவுகளைத் திட்டமிட்டு மாற்றியமைக்கும் முயற்சி” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரத்தை “அதிர்ச்சியளிப்பதாக” குறிப்பிட்ட சத்தா, 2025 ஜனவரி தொடக்கத்தில் மூன்று நாட்களில் புது டெல்லி தொகுதியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் விசாரணைகள் நடைபெற்றதாகத் தெரிவித்தார். அந்த விசாரணைகளுக்கு ஆட்சேபனை தெரிவித்த மொத்தம் 11 பேரும் அழைக்கப்பட்டதாகவும், அவர்களில் ஒவ்வொருவரும் வாக்குகளை நீக்குவதற்கான எந்த விண்ணப்பத்தையும் தாங்கள் சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவித்ததாகவும் அவர் கூறினார். மேலும், அவர்களின் பெயர்கள் “தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக” அவர்கள் தெரிவித்ததாகவும் சத்தா கூறியிருந்தார்.
