“சூரி அண்ணனின் ரத்தம் தோய்ந்த கைகளுக்கு ஆயிரம் முத்தங்கள்…”

செல்ஃபி பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் கடந்த 10ஆம் தேதி வெளியான படம் ‘மண்டாடி’. எல்ரெட் குமார் தயாரித்து வழங்கிய இப்படத்தில் வெற்றிமாறன் படைப்பாக்க தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்திருக்க தெலுங்கு நடிகர் சுஹாஸ் வில்லனாகவும் சத்​ய​ராஜ், ரவீந்​திரா விஜய், அச்​யுத் குமார் உள்ளிட்டோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களிலும் நடித்துள்ளனர். 

இப்படம் கடலில் நடக்கும் பாய்மரப் படகு போட்டியை மைய்யமாகக் கொண்டு உருவாகியுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே நந்தன் பட இயக்குநர் இரா.சரவணன் இப்படத்திற்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மண்டாடி காலத்திற்கும் நின்றாடும். மண்டாடி கதை கேட்ட நாளில் இருந்து அதுகுறித்த சிலாகிப்பை சூரி அண்ணன் சொல்லிக்கொண்டே இருப்பார். ஷூட்டிங்கில் கயிறு அறுத்து கைகளில் ரத்தம் கொட்ட நின்றார். படகில் சறுக்கி கால் உடைந்து நூலிலையில் தப்பினார். நேரில் சந்திக்கையில் அந்தக் காயங்களைக் காட்டினார். ஆறிய காயங்களைப் பார்க்கவே அவ்வளவு பதட்டமாக இருந்தது. 

இந்தளவுக்கு ரிஸ்க் எடுக்கனுமாண்ணே? என்றேன். இல்லண்ணே இன்னும் ரெண்டு மூணு வருசம் கழிச்சு இந்தக் கதை வந்திருந்தா என்னோட சக்திக்கு பண்ணி இருக்க முடியுமான்னு தெரியலை. உடம்புல வலு இருக்கிறப்பவே இந்த மாதிரி கதைகளைப் பண்ணிப் பார்த்திடனும்ணே… என்றார். படத்தின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியையும் சிறுகுழந்தைபோல் சொல்லிச் சிலிர்ப்பார். இதுகாலம் வரை எந்தப் படத்தின் ரிசல்ட்டுக்கும் அவர் இந்தளவுக்குத் தவம் கிடந்ததில்லை. 

‘மண்டாடி’ படத்தை பார்த்தேன். அத்தனை பேரின் மாபெரும் உழைப்புக்கான மகசூலைக் கொட்டிக் கொடுத்திருக்கிறது படம். களமாய் கதையாய் பேய்த்தனமான உருவாக்கமாய் படம் சிலிர்க்க வைக்கிறது. சூரி அண்ணனின் ரத்தம் தோய்ந்த கைகளுக்கு ஆயிரம் முத்தங்கள் கொடுக்கலாம். அப்படியொரு அதிரிபுதிரி பாத்திரம். அடக்கி வாசித்து வெடிக்கும் தருணங்களில் பிரளயம் கிளப்பி இருக்கிறார். காமெடியனாக, கதை நாயகனாக, கதாநாயகனாக அடுத்தடுத்து அடியெடுத்து வைக்கும் சூரி அண்ணன் ‘மண்டாடி’ படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக உச்சம் தொட்டிருக்கிறார். நெஞ்சை நிமிர்த்துகிற வெற்றி. இயக்குநர் மதிமாறன், ஒளிப்பதிவாளர் கதிர் சார் உள்ளிட்ட உழைத்தோர் அத்தனை பேருக்கும் உளமார்ந்த பாராட்டுகள். ‘மண்டாடி’ தமிழ் சினிமாவின் அசாத்திய படைப்பாக எந்நாளும் நின்றாடும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Source link