ஐதராபாத்: சாம்சன், பிரவிஸ் ரன் வேட்டை தொடர்ந்தால், சென்னை அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்யலாம்.
ஐதராபாத், ராஜிவ் மைதானத்தில் நடக்கும் லீக் போட்டியில் (ஏப். 18) சென்னை, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
சென்னை அணி முதல் மூன்று போட்டிகளில் தோற்றது. பின் டில்லி, கோல்கட்டாவை வென்றது. தொடர்ந்து மூன்றாவது வெற்றி பெற காத்திருக்கிறது. டில்லிக்கு எதிராக சதம் விளாசிய சாம்சன் நல்ல ‘பார்மில்’ உள்ளார். ஆயுஷ் மாத்ரே, பிரவிஸ், ஷிவம் துபே உள்ளிட்ட பேட்டர்கள் கைகொடுப்பது பலம். கேப்டன் ருதுராஜ் தடுமாறுகிறார். 5 போட்டியில் 63 ரன் தான் எடுத்துள்ளார். இவர் வலுவான துவக்கம் தர வேண்டும். கால் தசை பிடிப்பில் இருந்து மீண்டு வரும் தோனி இடம் பெறுவது சந்தேகம். இருப்பினும் சக வீரர்களுடன் ஐதராபாத் வந்துள்ளார்.
‘வேகப்புயல்’ கலீல் அகமது, தொடை பகுதி காயத்தால் விலகியது பின்னடைவு. இவருக்கு பதில் முகேஷ் சவுத்ரி அல்லது ராமகிருஷ்ணா கோஷ் வாய்ப்பு பெறலாம். ஓவர்டன், கம்போஜ், குர்ஜப்னீத் சிங் நம்பிக்கை தருகின்றனர். ‘சுழலில்’ அசத்த அகீல் ஹூசைன், நுார் அகமது உள்ளனர்.
மிரட்டும் அபிஷேக் : ஐதராபாத் அணியின் பேட்டிங் பலமாக உள்ளது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, கேப்டன் இஷான் கிஷான், கிளாசன், ஆல்-ரவுண்டர்’ நிதிஷ் குமார் விளாசலாம். ராஜஸ்தானுக்கு எதிரான கடந்த போட்டியில், அனுபவ ஹர்ஷல் படேல், உனத்கட் நீக்கப்பட்டு, புதுமுக ‘வேகங்களான’ பிரபுல் ஹிங்கே, சாகிப் ஹூசைன் வாய்ப்பு பெற்றனர். வைபவ் சூர்யவன்ஷி, ரியான் பராக் உட்பட 4 விக்கெட் வீழ்த்தினார் பிரபுல். இதே போல சாகிப் ஹூசைனும் 4 விக்கெட் கைப்பற்றினர். இதனால் பேட்டிங், பவுலிங் என இரு துறைகளிலும் ஐதராபாத் பலமாக உள்ளது.
யார் ஆதிக்கம்
இரு அணிகளும் 22 முறை மோதின. சென்னை 15, ஐதராபாத் 7ல் வென்றன.
* ஐதராபாத்தில் 5 போட்டிகளில் மோதின. இதில் ஐதராபாத் 3, சென்னை 2ல் வென்றன.
* ஐதராபாத், ராஜிவ் மைதான ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமானது.
* ஐதராபாத்தில் ஏப். 18ல் மழைக்கு வாய்ப்பு இல்லை
