கடந்த சில தினங்களாக தலைநகர் சென்னையில் தொடர் கொலைகள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக சென்னை பெசண்ட் நகரைச் சேர்ந்த தவெக நிர்வாகி கண்ணன் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதற வைத்தது.
இந்த சம்பவம் நடந்த சில நாட்களிலேயே அதாவது நேற்று (10-09-26) திருவொற்றியூரைச் சேர்ந்த பிரதீப் என்ற இளைஞரை மர்ம நபர்கள் வெட்டிப் படுகொலை செய்தனர். கடன் பிரச்சனை காரணமாக தொல்லை கொடுப்பதாக போலீசில் புகாரளித்த மறுநாளே பிரதீப்பை கொலை செய்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னையில் அடுத்தடுத்து நடந்த இரண்டு கொலைகளால் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாகவும் திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், சென்னையில் நேற்றிரவு மட்டும் சுமார் 70 ரவுகளை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். திருவொற்றியூர், பெசண்ட் நகர் கொலைகளைத் தொடர்ந்து சென்னையில் உள்ள ரவுடிகளை கண்காணிக்கவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த அடிப்படையில், நேற்றிரவு முதல் சிறப்பு கண்காணிப்பு மூலம் ரவுடிகளை காவல்துறை கைது செய்யும் நடவடிக்கை ஈடுபட்டு வருகின்றது.
அதன்படி, நேற்றிரவு ஒரே நாளில் மட்டும் சென்னையில் உள்ள சுமார் 70 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். காவல்துறை விசாரணையில் ஆஜாராகதவர்கள், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகாதவர்கள் ஆகியோர்களை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாக இருக்கும் ரவுடிகளையும் கணக்கிட்டு அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
