சென்னை: தமிழகத்தில் நடைபெறும் 10 புதிய ரயில் பாதை திட்டங்களில், 4 திட்டங்களுக்கு தலா ஒரு ரூபாய் மட்டுமே ஒதுக்கி இருக்கிறது மத்திய அரசு . திண்டிவனம் – செஞ்சி- திருவண்ணாமலை (70 கி.மீ.) அத்திப்பட்டு – புத்தூர் (88.30 கி.மீ.), ஈரோடு – பழனி (91.05 கி.மீ.), சென்னை – மாமல்லபுரம் – கடலுார் (179.28 கி.மீ.) ஆகிய புதிய பாதை திட்டங்களுக்கு தலா ஒரு ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் ஆர்டிஐயின் கீழ் சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் என்பவர் கேட்டதற்கு தெரியவந்தது.
திண்டுக்கல் – கரூர் – சேலம், ஓசூர் – ஓமலூர், அரக்கோணம் – ரேணிகுண்டா ஆகிய 3 தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்திருந்தது. வரும் நிதியாண்டில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படு பணிகள் படிப்படியாக நடைபெற இருக்கிறது. இந்த மூன்றுமே பல ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்த திட்டங்கள் ஆகும். அதேநேரம் மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில் நடைபெறும் திட்டங்களுக்கு, மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்துள்ள நிதி விபரங்களை கேட்டிருந்தார். அதில் தமிழ்நாட்டில் மொத்தம் 870.78 கி.மீ. தொலைவுக்கு 10 புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு, நடப்பு பட்ஜெட்டில் ரூ.497.57 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், இதுஇதற்கு முந்தைய பட்ஜெட்டை ஒப்பிடுகையில், 19.48 சதவீதம் குறைவாக இருக்கிறது என்பதும் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார்.
திண்டிவனம் – செஞ்சி- திருவண்ணாமலை (70 கி.மீ.) அத்திப்பட்டு – புத்தூர் (88.30 கி.மீ.), ஈரோடு – பழனி (91.05 கி.மீ.), சென்னை – மாமல்லபுரம் – கடலுார் (179.28 கி.மீ.) ஆகிய புதிய பாதை திட்டங்களுக்கு தலா ஒரு ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது தெரியவந்திருப்பதாக சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் கூறியுள்ளார். அதேபோல் புதிய ரயில் பாதைகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.497.57 கோடியில் வெறும் இரண்டு திட்டங்கள் மட்டுமே மொத்த நிதியில் 87.4 சதவீதம் பெற்றுள்ளதாக குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் இரட்டை பாதை-கூடுதல் பாதை திட்டங்கள் மிகக்கடுமையான நிதிச்சரிவை சந்தித்திருக்கிறது என்றும் கூறினார்.
14 இரட்டைப்பாதை- கூடுதல் பாதை திட்டங்களின் (658.34 கி.மீ.) மொத்த மதிப்பீடு ரூ.8,173.35 கோடி என்றும் ஆனால் 2026-27-ம் நிதியாண்டில் வெறும் ரூ.324.10 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளி விவரங்களை சுட்டிக்காட்டி சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் கூறினார்.
காட்பாடி – விழுப்புரம், சேலம் – கரூர் – திண்டுக்கல், ஈரோடு – கரூர் ஆகிய 3 முக்கிய திட்டங்களுக்கான நிதி ரூ.400.45 கோடியில் இருந்து ரூ.12 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய சமூக ஆர்வலர், இந்த திட்டத்திற்கு நிதி குறைக்கப்பட்டுள்ளதால், புதிய, இரட்டைபாதை பணிகள் பின்னடைவை சந்தித்துள்ளன என்றார்.
இதேபோல் , இரட்டை பாதை திட்டங்களுக்கும் குறைவான நிதியே வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு, நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் செய்து வருவதாக ரயில்வே நிர்வாகம் குற்றச்சாட்டியிருக்கும் அதே வேளையில், புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு போதிய நிதியும் ஒதுக்காதது அம்பலமாகி உள்ளது.
