“செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்”

தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா, உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார்.

“அன்புப் பெரியோர்களே.. அருமைத் தாய்மார்களே.. இனிய குழந்தைகளே..” என்ற சொற்றொடருக்கு சொந்தக்காரரான இவர், தமிழ் இலக்கியத்திற்கும் பட்டிமன்றக் கலைக்கும் ஆற்றிய தொண்டால் அவர் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்த சூழலில் அவரது மறைவு தமிழ் உலகிற்கு பெரும் இழப்பாகும். சாலமன் பாப்பையாவின் மறைவிற்கு தமிழ் ஆர்வலர்கள், தலைவர்கள் என பலரும் தங்களது இரங்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய், சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, “தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.

தமது நகைச்சுவை கலந்த பேச்சாலும், ஆழ்ந்த தமிழ்ப் புலமையாலும், சமூகச் சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு, பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக அல்லாமல், சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் பங்கு மகத்தானது. அவரது மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

Source link