தலைமைச் செயலகத்தை திருச்சிக்கு மாற்றுங்க.. எம்.ஜி.ஆரின் கனவை முதல்வர் விஜய் நிறைவேற்றனும்- துரைவைகோ – mdmk mp durai vaiko urges chief minister vijay to make trichy the second capital

சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இதற்காக பட்டினப்பாக்கத்தில் வீட்டு வசதி வாரியம் மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான 26.36 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, திட்டத்தைச் செயல்படுத்த 3 குழுக்கள் அமைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இத்திட்டத்திற்கு அதிமுக, பாஜக, திமுக மற்றும் பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நிதி நெருக்கடி நேரத்தில் இத்திட்டம் தேவையா என்றும், பட்டினப்பாக்கத்தில் இது அமைந்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளன. மேலும், அரசிற்கு ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாற்று இடத்தைப் பரிசீலிக்குமாறு வலியுறுத்தியுள்ளன.

இந்த நிலையில், புதிய தலைமைச் செயலகத்தை திருச்சியில் கொண்டு வர வேண்டுமென மதிமுக எம்.பி. துரை வைக்கோ தெரிவித்துள்ளார். இது குறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிகையில், தமிழகத்தின் நிதித் தலைநகராகச் சென்னையும், நிர்வாகத் தலைநகராகத் திருச்சியும் செயல்படும் வகையில், திருச்சியை மாநிலத்தின் இரண்டாவது தலைநகராக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது.

முதலமைச்சரிடம் அளிக்கப்பட்ட மனு

மாநிலத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முதலமைச்சரைச் சந்தித்து12 முக்கியக் கோரிக்கைகள்அடங்கிய மனு ஒன்று அளிக்கப்பட்டது. இதில் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் வளர்ச்சி குறித்த 9 கோரிக்கைகளுடன், 3 பொதுக் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. அதில் முதன்மையானதாக, திருச்சியைத் தமிழகத்தின் இரண்டாவது (நிர்வாக) தலைநகராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது.

டெல்லி – மும்பை கட்டமைப்பு முன்மாதிரி

இந்திய நாட்டின் நிர்வாகத் தலைநகராக டெல்லியும், நிதித் தலைநகராக மும்பையும் செயல்படுவது போல, தமிழ்நாட்டிலும் சென்னையை நிதித் தலைநகராகவும், திருச்சியை நிர்வாகத் தலைநகராகவும் மாற்ற வேண்டும். தலைமைச் செயலகம் (Secretariat) உள்ளிட்ட முக்கிய நிர்வாக அலுவலகங்களைத் திருச்சிக்கு மாற்றுவது இதற்கான சரியான தொடக்கமாக இருக்கும்.

சென்னையில் அதிகரித்து வரும் நெருக்கடி

தலைநகர் சென்னையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்கள் தொகை நெருக்கடி காரணமாகச் சாதாரண மக்கள் வசிக்க முடியாத சூழல் உருவாகி வருகிறது. வீடுகள், குடியிருப்பு வளாகங்களின் விலை ஏற்றமும் அதிகரித்துள்ளது. திருச்சியை நிர்வாகத் தலைநகராக்கும் போது, சென்னை பெருநகரத்தின் நெரிசல் (De-congestion) கணிசமாகக் குறையும் என்று கூறினார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் தொலைநோக்குப் பார்வை

மேலும் முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆட்சிக் காலத்தில் திருச்சியைத் தலைநகராக்கும் தொலைநோக்குச் சிந்தனையை முன்வைத்தார். அப்போது அது பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்திருந்தாலும், தற்போதைய சூழலில் அது மிகவும் அவசியமான ஒன்று என்பது நிரூபணமாகியுள்ளது.

மையப்பகுதி மற்றும் சமச்சீர் வளர்ச்சி

தமிழகத்தின் மையப்பகுதியில் திருச்சி அமைந்துள்ளதால், கன்னியாகுமரி முதல் கொங்கு மண்டலம் வரை மாநிலத்தின் எந்தவொரு பகுதியிலிருந்தும் பொதுமக்கள் 3 முதல் 3.5 மணி நேரத்திற்குள் எளிதாகத் திருச்சியை வந்தடைய முடியும். இது சாமானிய மக்களின் நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் அரசியல் தேவைகளை விரைவாகத் தீர்க்க உதவும்.

மேலும், இத்திட்டம் திருச்சிக்கு மட்டுமல்லாது, சுற்றியுள்ள மத்திய மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்தத் தமிழகத்தின் சமச்சீரான மேம்பட்டிற்கும் பெருமளவில் வழிவகுக்கும் என்பதால், முதலமைச்சர் இக்கோரிக்கையை ஏற்றுச் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Source link