மதுரை மாவட்டம் செல்லூர் அருகே கண்மாயில் பள்ளி மாணவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை மாநகர் கூடல் நகர் வானவில் நகர் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி என்பவரின் மகன் தமிழ்ச்செல்வன். ஆரப்பாளையம் பகுதியில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று விடுமுறை தினம் என்பதால் கிரிக்கெட் விளையாடுவதற்காக வெளியே சென்ற தமிழ்ச்செல்வன் வீடு திரும்பவில்லை.
இதனால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களிலும் தேடி வந்தனர். மாணவன் தமிழ்ச்செல்வன் கிடைக்காததால் கூடல் புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன தமிழ்ச்செல்வனை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை மதுரை ஆனையூர் பகுதியில் உள்ள கழிவுநீரேற்று நிலையம் அருகே உள்ள செல்லூர் கண்மாய் பகுதியில் தமிழ்ச்செல்வன் மர்மமான முறையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. மீட்கப்பட்ட சிறுவனின் சடலமானது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கண்மாயில் குளிக்கும் போது நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தாரா அல்லது அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
11ஆம் வகுப்பு பள்ளி மாணவன் கண்மாயில் இருந்து சடலமாக மீட்கப்பட் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
