சேலம் ஜவுளி பூங்கா அமைப்பதில் ஊழல்: அதிகாரிகள் துணைபோவதாக குற்றச்சாட்டு

– நமது நிருபர் -:

சேலத்தில் அரியவகை கனிமங்கள் இருக்கும் இடத்தை, ஜவுளிப் பூங்கா அமைக்க, தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கியதில், பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கடந்த தி.மு.க., ஆட்சியில், சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில், ஜவுளிப் பூங்கா அமைக்க இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த இடத்தில், அரிய வகை கனிமமான மேக்னசைட், டுனைட் அதிகம் உள்ளன.

அதோடு, ஜவுளி பூங்கா அமைந்தால், சாயப்பட்டறை வழியே நீர்வளம் பாதிக்கப்படும் என, சுற்று வட்டார மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இழப்பு ஆனால், சத்தமில்லாமல் மேக்னசைட் உள்ள, 110.53 ஏக்கர் நிலத்தை, சதுர அடிக்கு வெறும் 201 ரூபாய் வீதம், 97 கோடி ரூபாய்க்கு, 99 ஆண்டுக்கு சேலம் ‘யார்ன் கலரிங் பார்க் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்துக்கு, சிப்காட் கொடுத்துள்ளது.

ஆனால், அந்த இடத்துக்கு அருகில் உள்ள இடங்கள், அரசின் பல்வேறு துறைகளுக்கு, சதுர அடிக்கு 1,005 ரூபாய்க்கு கொடுப்பட்டன. இந்நிறுவனத்துக்கு குறைந்த மதிப்பில், நிலத்தை கொடுத்ததனால், 474 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து இந்த இடத்தை, கனிமவளத்துறை ஆய்வு செய்தது. இது தொடர்பாக, கனிமவளத்துறை கமிஷனர் 2022 செப்., 7 ம் தேதி, தொழில்துறை செயலருக்கு அனுப்பிய அறிக்கையில், ‘இந்த இடத்தில் 3,860.85 கோடி ரூபாய் மதிப்புள்ள, 67 லட்சம் டன் மேக்னசைட் மற்றும் டுனைட் கனிமங்கள் உள்ளன.

‘இப்பகுதியை முழுமை யாக ஆய்வு செய்தால், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கனிமங்கள் இருக்கும். எனவே, ஜவுளி பூங்காவுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்’ என, கூறப்பட்டிருந்தது.

ஆனால், சேலம் மாவட்ட வருவாய் அலுவ லர், அந்த இடத்தில் எவ்வித கனிமமும் இல்லை என, 2023 செப்., 30ம் தேதி அரசுக்கு அறிக்கை அளித்துள்ளார். அதையேற்று, ஜவுளி பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

இத்திட்டத்திற்கு, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், த.வெ.க., அரசும், அந்த திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது.

நடவடிக்கை இது குறித்து, சேலம் நீர் ஆதார பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:

மக்களின் எதிர்ப்புக்கு பின், சேலம் யார்ன் கலரிங் பார்க் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரை, ‘சேலம் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா பிரைவேட் லிமிடெட்’ என, கடந்த ஜூலை 22ம் தேதி பெயரை மாற்றி, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

இதன் வழியே, அரசை நிறுவனம் ஏமாற்றி உள்ளதா அல்லது அரசு மக்களை ஏமாற்றுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பல்வேறு முறைகேடுகளுடன் தொடங்கப்பட்ட, இந்த திட்டத்தை த.வெ.க., அரசில் உள்ள சில அதிகாரிகள், செயல்படுத்த நினைக்கின்றனர். அதற்கு த.வெ.க., அரசு துணை போகக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து, கனிமவளத்துறை அமைச்சர் பிரபுவிடம் கேட்டபோது, ”சேலம் ஜவுளிப்பூங்கா விவகாரம், எனது கவனத் திற்கு வந்துள்ளது. அதிகாரி களுடன் ஆலோசனை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

அப்படி ஒரு திட்டமே இல்லை மத்திய அமைச்சர் விளக்கம்

சேலம் ஜவுளி பூங்கா திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என த.மா.கா., சார்பில், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு கடந்த ஜூன் 22ம் தேதி, அவர் அனுப்பிய பதிலில், ‘ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டங்களின் கீழ், சேலம் மாவட்டத்தில், எவ்வித ஜவுளி பூங்கா திட்டமும் செயல்படுத்தவில்லை. மாநில அரசு எந்தவித அனுமதியும் வழங்கவில்லை. ‘மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்ததால், ‘சேலம் யார்ன் கலரிங் பார்க்’ மூடப்பட்டுள்ளது என, தமிழக அரசு தெரிவித்துள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. சேலத்தில் ஜவுளி பூங்கா அமைக்க, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மத்திய அமைச்சரின் விளக்கம், புது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரூ.5,208 கோடி ஊழல் சேலம் ஜவுளி பூங்காவுக்கு நிலம் ஒதுக்கீடு முதல், அனைத்து விஷயத்திலும் 5,208.48 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்து உள்ளது. இது குறித்து சட்டசபையில் பேசி உள்ளேன். முதல்வர் விஜயை சந்தித்து புகாரும் கொடுத்துள்ளேன். ஊழல் அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். – மணி, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., ஓமலுார்

Source link