புதுடில்லி: ‘பென்குயின் இந்தியா’ நிறுவனம் விலகியதை அடுத்து, காங்., மூத்த தலைவர் சோனியாவின் சுயசரிதையை, அமெரிக்காவைச் சேர்ந்த, ‘ஹார்ப்பர் காலின்ஸ் இந்தியா’ நிறுவனம் வெளியிடுகிறது.
முன்னாள் பிரதமர் ராஜிவின் மனைவியும், காங்., மூத்த தலைவரும், அக்கட்சியின் பார்லி., குழு தலைவருமான சோனியா, 79, தன் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதி உள்ளார்.
‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆப் லவ்’ என்ற பெயரில், 544 பக்கங்களுக்கு தயாராகும் புத்தகத்தை, சர்வதேச அளவில், அமெரிக்காவைச் சேர்ந்த, ‘பென்குயின் ரேண்டம் ஹவுஸ் நிறுவனம்’ நவ., 10ல் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
நம் நாட்டில், அந்நிறுவனத்தின் துணை நிறுவனமான, பென்குயின் இந்தியா வெளியிடுவதாக இருந்தது. இந்த சூழலில், புத்தகத்தில் உள்ள சில பகுதிகளில் மாற்றங்களை செய்யும்படியும், சில பகுதிகளை நீக்கும்படியும், பென்குயின் இந்தியா நிறுவனம் வைத்த கோரிக்கையை, சோனியா ஏற்கவில்லை.
அதிருப்தி அடைந்த, பென்குயின் இந்தியா நிறுவனம், ‘சோனியாவின் சுயசரிதையை வெளியிட ஆர்வமாக இருந்தோம். ‘எனினும், எதிர்பாராதவிதமாக இந்தியாவில் அந்த புத்தகத்தை நாங்கள் வெளியிடவில்லை’ என, சமீபத்தில் அறிவித்தது. இதற்கு மத்திய பா.ஜ., அரசின் அழுத்தமே காரணம் என, காங்கிரசும் விமர்சித்தது.
இதனால், சோனியாவின் சுயசரிதை திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த, ‘ஹார்ப்பர் காலின்ஸ்’ நிறுவனத்தின் இந்திய பிரிவான, ‘ஹார்ப்பர் காலின்ஸ் இந்தியா’ நிறுவனம், சோனியாவின் சுயசரிதையை இந்தியாவில் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது.
இது குறித்து, சமூக வலைதளத்தில், ஹார்ப்பர் காலின்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்ட பதிவில், ‘சோனியா எழுதிய, ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆப் லவ்’ என்ற புத்தகத்தை நாங்கள் வெளியிடுகிறோம். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த சுயசரிதை, நவ., 10ல் இந்தியாவில் வெளியிடப்படும்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இந்த சுயசரிதையை பென்குயின் நிறுவனமே வெளியிடும் என தெரிகிறது.
