2031ல் பாமக ஆட்சி வரும்… ஆனா வராது…: அந்துமணி பதில்கள்

கல்லிடை சிவா, நெல்லை:

‘வரும், 2031ல் பா.ம.க., ஆட்சி அமையும்’ என, அக்கட்சியின் தலைவர் அன்புமணி, எந்த அடிப்படையில் கூறுகிறார்?

தமிழகத்தில், ஒவ்வொரு முறை ஆட்சி அமையும்போதும், ‘அடுத்து எங்கள் ஆட்சி தான்’ என்பார்; ஆனால், அமையாது. ஒரு திரைப்பட காமெடி காட்சியில், வடிவேலுவிடம், ‘என்னத்த’ கன்னையா, ‘வரும்… ஆனா வராது…’ என்பாரே… அது போல!

நளினி ராமச்சந்திரன், கோவை:

உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என, முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானம், சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட செய்தியை, தினமலர் நாளிதழழில் படித்தபோது, முதல்வருக்கு, ‘ராயல் சல்யூட்’ வைக்கத் தோன்றியதே அந்துமணி?


வைக்கலாம் தான்! 2006ல், தி.மு.க.,வைச் சேர்ந்த அப்போதைய முதல்வர் கருணாநிதியும், இதே போல் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறார் நளினி!

ஏ.ஸ்ரீவித்யா, பெங்களூரு:

அத்தியாவசிய பொருளாகக் கருதப்படுவதால், வெங்காயம், ரேஷன் கடைகளில் விற்கப்படுவது குறித்து…

கடந்த, 1998 ல், வெங்காய விலை, கிலோவுக்கு 60 ரூபாய் வரை சென்றதால், டில்லி மற்றும் ராஜஸ்தானில் அதே ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., கட்சி ஆட்சியை இழந்தது. தற்போதும் வெங்காய விலை அதிகரித்துள்ளதால், பயந்து போன மத்திய அரசு, அனைத்து ரேஷன் கடைகள் வாயிலாகவும், குறைந்த விலையில் வெங்காயம் விற்பனையாகும் வகையில், ‘வெங்காய எக்ஸ்பிரஸ்’ என்ற ரயில் மூலம் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வருகிறது.

பா.முருகன், ராமநாதபுரம்:

‘அ.தி.மு.க.,வில் எனக்கு எந்த பதவியும் தரவில்லை’ என, நடிகர் ராமராஜன் ஆதங்கப்படுகிறாரே?

அ.தி.மு.க.,வே கிடுகிடுத்துக் கிடக்கு… இதுல ராமராஜனுக்கு பதவி ஆசை வேறா!

கே.ஜே.செல்வராஜ், கோத்தகிரி:

‘முன்பு, மதியம் 2:00 மணிக்கெல்லாம் வீட்டிற்குச் சென்று விடுவோம். இப்போது, காலை 9:30 மணி முதல், இரவு 7:15 மணி வரை சட்டசபையில் உட்கார்ந்து இருக்கிறீர்களே?’ என, தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்களிடம், உதயநிதி கேட்டு இருக்கிறாரே?


முந்தைய ஆட்சியில் மக்கள் வரிப் பணத்தை வீணடித்துக் கொண்டிருந்தோம். இப்போது அது நடக்கவில்லை என, உதயநிதி கூறுவதாக இதை நாம் எடுத்துக் கொள்வோமா, செல்வராஜ்!

பா.விஜயமுருகன், தென்காசி:

இதுவரை ஆண்ட கட்சிகள் செய்ய முடியாத பல நல்ல திட்டங்களை, முதல்வர் ஜோசப் விஜய் செய்து வருகிறார். ஆனால், அவர் எந்த நலத் திட்டங்கள் அறிவித்தாலும், செயல்படுத்தினாலும் குறை கூறுகின்றனரே சிலர்?


* எதிர்க்கட்சி என்றால், ஆளுங்கட்சியினரின் எல்லா அறிவிப்புகளுக்கும் எதிர்ப்பு கூறும் கட்சியாகவே இருக்க வேண்டும் என்று நினைத்து விட்டனர் போலும்!

Source link