திருச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்கு முன்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அய்யாக்கண்ணு, விவசாயிகளின் வாழ்வாதார உரிமைகளுக்காகப் போராடிய விவசாய சங்கத் தலைவர்கள் மீது திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலங்களில் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளைத் திரும்பப் பெறப்போவதாகத் தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார். முன்னதாக, அதிமுக ஆட்சிக் காலத்தில் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக திமுக ஆட்சிக் காலத்தில் அன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்ததாகவும், ஆனால் அவர் அதனை நடைமுறைப்படுத்தவில்லை என்றும் தெரிவித்தார். எனவே, தற்போதைய முதல்வர் விஜய் தனது அறிவிப்பை உண்மையாகவே நடைமுறைப்படுத்தப் போகிறாரா இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும், வழக்குகளைத் திரும்பப் பெற்றால் அது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளிப்பதாக அமையும் என்றும் கூறினார்.
மேலும், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடைப் பகுதிக்குச் சென்று சேர வாய்ப்பில்லை என்பதால், காவிரி நீரை திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிளை வாய்க்கால்களிலும் திறந்து விட வேண்டும் என்றும், 110 நாட்களுக்குத் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். திருச்சியில் காவிரி கரையோரம் உள்ள வாழை, தென்னை, பனை உள்ளிட்ட மரங்கள் நீரின்றி காய்ந்து வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், உடனடியாகத் திருச்சியில் உள்ள வாய்க்கால்கள் அனைத்திலும் தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்றும், தவறினால் அடுத்தகட்டமாக மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் எச்சரித்தார்.
தவெக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி விவசாயக் கடன்கள் அனைத்தையும் உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், பாஜக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி விவசாய விளைபொருட்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும் வகையில் விலையை இரட்டிப்பாக்கி நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். விவசாயிகளின் வாழ்வாதார உரிமைகளுக்காக நடத்தப்படும் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்குத் தடை விதிக்கக் கூடாது எனக் கூறிய அவர், விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசும் தமிழக அரசும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
