நிலைதடுமாறி கீழே விழுந்த மாணவர்கள் : ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட், புதுக்கோட்டை மண்டலத்தைச் சார்ந்த நகரப் பேருந்து தடம் எண் 08, (பேருந்து எண் TN 55 / N 1191) என்ற பேருந்து கீரனூரில் காலை சுமார் 08.30 மணி அளவில் நடை எடுத்து புதுக்கோட்டை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது பேருந்தில் 90 பயணிகள் இருந்த நிலையில் சுமார் 09.05 மணி அளவில் ரெங்கம்மாள் சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் மேலும், சுமார் 30 பயணிகள் பயணிகள் மற்றும் மாணவ மாணவிகளை ஏறியுள்ளனர். 

இந்நிலையில் பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை நகர்த்தும் பொழுது படிக்கட்டில் மாணவ மாணவிகள் அதிக அளவில் தொங்கியபடி வந்ததால் கீழே விழுந்து ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்கும் பொருட்டு பேருந்தின் கதவை மூடி விட்டு பேருந்தை நகர்த்தியுள்ளார். அப்பொழுது பேருந்தின் கூட்ட நெரிசல் காரணமாக உள்ளே நின்ற பயணி ஒருவர் முன் படிக்கட்டின் அருகில் உள்ள அவசர கதவு திறக்கும் பொத்தானை அழுத்தியதால் பேருந்தின் முன் படிக்கட்டு திறந்து படியில் நின்ற மாணவ மாணவிகள் சிலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில் 10 மாணவ மாணவிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. 

காயம் ஏற்பட்ட மாணவ, மாணவிகள் உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2 பேர் உள்நோயாளிகளாகவும், 08 பேர் புற நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக வெள்ளனூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாகப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு பொது மேலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

Source link