எகிப்து: சர்வதேச விமானக் கண்காட்சியில் பங்கேற்பதற்காக, இந்திய விமானப் படையின் சாரங் குழு எகிப்து சென்றடைந்தது.
எகிப்தின் எல் அலாமைன் சர்வதேச விமான நிலையத்தில் செப்டம்பர் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை சர்வதேச விமானக் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த விமானக் கண்காட்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விமானப்படை வீரர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.
அந்த வகையில், இந்திய விமானப் படையின் சாரங் குழுவும் இந்த விமானக் கண்காட்சியில் பங்கேற்க இருக்கிறது. இதற்காக, இந்திய விமானப்படையின் சாரங் ஹெலிகாப்டர் சாகசக் குழு எகிப்து சென்றடைந்தது.
உலகிலேயே 5 ஹெலிகாப்டர்களைக் கொண்ட ஒரே சாகசக் குழுவான சாரங், துல்லியமான மற்றும் ஒருங்கிணைந்த வான்வழி சாகசங்கள் மூலம் இந்தியாவின் உள்நாட்டு விண்வெளித் துறையின் திறன்களை வெளிப்படுத்தவுள்ளது.
உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட துருவ் ஹெலிகாப்டர்களைக் கொண்டு சாகசங்களை நிகழ்த்தும் இந்தக் குழுவின் செயல்பாடுகள், இந்தியாவுக்கும், எகிப்துக்கும் இடையிலான வளர்ந்து வரும் பாதுகாப்பு மற்றும் தூதரக உறவுகளின் முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
