2026 சட்டப்பேரவை தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு எப்பொழுது இடைத்தேர்தல் ஏற்ற கேள்வி ஒருபுறம் மேலோங்கி வந்தது. இந்தநிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தலுக்கான தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தமாக ஏழு தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் தனித் தொகுதிக்கும், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி தொகுதிக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டுமே அதிமுக கைப்பற்றிய தொகுதிகள் ஆகும். தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களோடு நடைபெறக்கூடிய இடைத்தேர்தலில் தமிழ்நாட்டின் இந்த இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல் தாராபுரம் தொகுதியில் சத்யபாமா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இருவரும் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். தற்பொழுது இந்த இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் மாதம் ஆறாம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் அதாவது செப்.9 ஆம் தேதி முதல் இந்த இரண்டு தொகுதிகளுக்கும் வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற செப்டம்பர் 16ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு அக்டோபர் ஆறாம் தேதி நடைபெற உள்ள நிலையில் அக்டோபர் ஒன்பதாம் தேதி வாக்குகள் எண்ணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியான நிலையில் தற்போதே இந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
