மதுரை: சைபர் கிரைம்களை தடுக்க நடவடிக்கை கோரிய வழக்கில், ‘தமிழகத்திலிருந்து மட்டும் தினமும், 2,000 புகார் அழைப்புகள் ‘1930’ உதவி எண்ணிற்கு வருகின்றன’ என, அரசு தரப்பில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டது.
சைபர் குற்றங்களை கையாள விதிமுறைகளை வகுக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி, திருச்சி, வகுல கிரி தாக்கல் செய்த பொதுநல மனுவை, நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கில், காணொலி மூலம் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ராஜேஷ் குமார் மற்றும் தொலைத்தொடர்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் 11 அதிகாரிகள் ஆஜராகி, தெரிவித்ததாவது:
உதவி எண்ணை மக்களுக்கு மேலும் எளிதாக, பயனுள்ளதாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை, ஜூலை 16ல் ஆலோசனை கூட்டம் நடந்தது.
‘1930’ உதவி எண் மூலம் வரும் அழைப்புகளை கையாள கூடுதல் பணியாளர்கள், திறன் வாய்ந்த பணியாளர்கள் தேவைப்படுகின்றனர் என்பதை மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.
தமிழகத்திலிருந்து மட்டும் எந்தவொரு நாளிலும், 2,000 அழைப்புகள் ‘1930’க்கு வருகின்றன. மக்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் வங்கி செயலிகளுடன் இந்த உதவி எண்ணை இணைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித் தனர்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மத்திய உள்துறை அமைச்சகம், தேசிய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம், தொலைத்தொடர்புத்துறை, தமிழக டி.ஜி.பி., உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினர் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய மற்றும் குறைகளை தீர்க்க இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அக்., 29ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தர விட்டனர்.
