தமிழகத்தில் ரயில்வே திட்டங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி:அரக்கோணம் – ரேணிகுண்டா, ஓசூர் – ஓமலூர், சேலம் – கரூர் – திண்டுக்கல் இடையிலான ரயில்ப்பாதை திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள 17 மாவட்டங்கள் உள்ளடக்கிய பல வழித்தட ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதனால், இந்திய ரயில்வே நெட்வொர்க்கின் நீளம் 540 கிமீ., தூரம் கூடுதல் ஆகும். இந்த திட்டங்களின் மதிப்பு 10,021 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. 2029 -2030 ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அந்த திட்டங்கள்

தமிழகத்தின் அரக்கோணம் – ஆந்திராவின் ரேணிகுண்டா இடையே 3வது மற்றும் 4வது வழித்தடம் ( 77 கிமீ.,தூரம்)

பெங்களூருவின் வொயிட்பீல்டு – பங்காரபேட்டை இடையே 3வது மற்றும் 4வது வழித்தடம் ( 47 கிமீ.,தூரம்)

ஓசூர் – ஓமலூர் இரட்டை வழிப்பாதை (147 கிமீ.,)

சேலம் – கரூர் – திண்டுக்கல் இரட்டைப்பாதை -159 கிமீ., தூரம்

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்( கட்கேசர்)- காஜிபேட் இடையில் பல வழித்தடம்(110 கிமீ) பாதைகள் அமைக்கப்படுகின்றன.

இந்த திட்டங்களால் 2,121 கிராமங்கள் இணைப்பு பெறும். இந்த கிராமங்களில் 52 லட்சம் பேர் வசிக்கின்றனர். இந்த பாதைகளில் கூடுதலாக ஆண்டுக்கு 47 மில்லியன் டன்கள் சரக்குகள் கொண்டு செல்ல முடியும். மேலும், நாடு முழுவதும் உள்ள பல முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கான ரயில் இணைப்பை மேம்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link