தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா, உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.
‘அன்புப் பெரியோர்களே.. அருமைத் தாய்மார்களே.. இனிய குழந்தைகளே..’ என்ற சொற்றொடருக்கு சொந்தக்காரரான இவர், தமிழ் இலக்கியத்திற்கும் பட்டிமன்றக் கலைக்கும் ஆற்றிய தொண்டால் தமிழக மக்களிடம் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்த சூழலில் அவரது மறைவு தமிழ் உலகிற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலமன் பாப்பையாவின் மறைவிற்கு தமிழ் ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் எனப் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, “தமிழ் மேடையின் ஒரு பொற்காலம் மறைந்தது. பட்டிமன்றத்தை வீடு வீடாக கொண்டு சென்ற, தமிழை எளிமையாக, அழகாக பேசி புரிய வைத்த சாலமன் பாப்பையா அவர்களின் மறைவு தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு. அவரது சொற்கள் வழி வழியாக தமிழுக்குள் வாழும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
