கட்டணக் கொள்ளையை கண்டு கொள்ளாத அரசு; ஆம்னி பஸ்களிடம் இருந்து த.வெ.க-வுக்கு பார்ட்டி ஃபண்ட் வருகிறதா? தி.மு.க கேள்வி

வருகிற திங்கள்கிழமை (செப்.11) நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதனை ஒட்டி சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர் நோக்கி கிளம்பி வருகிறார்கள். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் ஆம்னி பஸ் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து கோவை, மதுரை, நெல்லை என அனைத்து முக்கிய நகரங்களுக்கும் ரூ.4,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இந்த நிலையில், கட்டணக் கொள்ளையை கண்டு கொள்ளாத அரசு என்றும், ஆம்னி பஸ்களிடம் இருந்து த.வெ.க-வுக்கு பார்ட்டி ஃபண்ட் வருகிறதா? என்றும் தி.மு.க கேள்வி கேள்வி எழுப்பி இருக்கிறது. இது தொடர்பாக தி.மு.க ஐ.டி. விங் பகிர்ந்துள்ள சமூக வலைதள பதிவில், “த.வெ.க ஆட்சியில் லஞ்சமே கிடையாது, ஆம்னி பேருந்துகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும்தான் வாங்கும் என்று கேமரா முன்னால் நடித்த பி.ஆர் (PR) நாடகங்களை நம்பி, சமூக ஊடகங்களில் வாந்தி எடுத்த ‘வாடகை வாய்கள்’ இப்போது எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்?

ஆம்னி பேருந்துகள் நடத்தும் வரலாறு காணாத கட்டணக் கொள்ளையைக் கண்டும் காணாமல் குருடாகிப் போனது ஏன்? பல ஆயிரம் ரூபாய்களை மக்களிடம் இருந்து பகல் கொள்ளையடிக்கும் பேருந்துகளுக்கு, பெயரளவில் கூட ஒரு எச்சரிக்கை விட இந்தத் துறைக்கு வக்கில்லை. காரணம், ஆம்னி பேருந்துகள் சாமானிய மக்களிடம் செய்யும் இந்த மெகா கட்டணக் கொள்ளையிலிருந்து நேரடியாக பார்ட்டி ஃபண்ட் (Party Fund) என்ற பெயரில் தவெகவுக்குப் பாயும் பல கோடி ரூபாய் கமிஷனா?! அப்படியென்றால் கமிஷன் பங்கு யாருக்கெல்லாம் செல்கிறது?

சினிமா டயலாக் பேசி ஆட்சியைப் பிடித்தால், சாமானிய மக்களின் ரத்தம் எப்படி உறிஞ்சப்படும் என்பதற்கு இந்த ஆம்னி பேருந்து கொள்ளையே சாட்சி! பதில் சொல்லுங்கள் ‘டம்மி’ முதலமைச்சரே” எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்

Source link