இந்த பரபரப்பான சூழ்நிலையில், 3 நாள் விடுமுறைக்குப் பின் தமிழக சட்டப்பேரவை இன்று (07-09-26) கூடியது. அப்போது, சட்ட ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதிலளித்தார். அப்போது முதல்வர் விஜய், திமுக குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கடுமையாக விமர்சித்து ஆவேசமாகப் பேசினார். குறிப்பாக 1970களில் கலைஞர் தனது முதல்வர் பதவியை தவறாக பயன்படுத்தியதாக சர்க்காரிய விசாரணை கமிஷனில் இருப்பதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் திமுக கட்சி நிதி வாங்கியதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கட்சி நிதி என்ற பெயரில் வாங்கிய லஞ்சத்தில் மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினுடம் பலன் பெற்றார்கள் என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து முதல்வர் விஜய் பேசியதைத் தொடர்ந்து, அதற்கு பதில் அளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். குறிப்பாக எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்ட திமுக தலைவர்கள் சபாநாயகரை நோக்கி கேள்விகளை எழுப்பினர். சபாநாயகர் இருக்கை முன்பு கூடியிருந்த திமுகவினர் சிலர், முதல்வர் விஜயிடமே பேச அனுமதி அளிக்க வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.
முதல்வர் விஜயும் சபாநாயகரிடம் வாய்ப்பு கொடுங்க என்று வலியுறுத்திக் கூறினார். அதனை தொடர்ந்து பேசுவதற்கு வாய்ப்பு கொடுப்பதாகக் கூறினார். ஆனால் சிறிது நேரத்திலேயே சபாநாயகர், பதில் அளிக்க அனுமதி அளிக்க முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறினார். இதையடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
