டெல்லியில் உள்ள சத்ய நிகேதன் பகுதியில், டெல்லி பல்கலைக்கழகம் அருகே ஆண்களுக்கான தங்கும் விடுதி (பிஜி) ஒன்று செயல்பட்டு வந்தது. நேற்று மதியம் சுமார் 1.30 மணியளவில், இந்த விடுதி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கட்டிடத்திற்குள் சுமார் 40 முதல் 50 மாணவர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் துரிதமாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விடிய விடிய நடத்தப்பட்ட இந்த மீட்பு பணியில் பெரும்பாலானோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில், இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 25 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, அவசர ஊர்திகள் மூலம் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள மாணவர்களின் நிலை என்ன? என்பது தெரியவில்லை.
ஞாயிற்றுக் கிழமை அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த சமயத்தில், விடுதியில் 40 பேர் வரை உள்ளே இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் இணைந்த நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, அந்த கட்டடத்தின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விபத்துக்குக் காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், “அந்த கட்டடம் சுமார் 50 ஆண்டுகள் வரை பழமை வாய்ந்தது. சம்பவம் நடந்தபோது அடித்தளத்தில் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன” என்று தெரியவந்துள்ளது.
இதனிடையே, இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், “ திடீரென கட்டிடம் இடிந்து விழுந்தது. அப்போது உள்ளே இருந்தவர்கள் அலறினர். அந்த அலறல் சத்தம் எங்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்தது” என்று கூறியுள்ளனர்.
