தலைவனிடமே கைவரிசை; யார் அந்த பலே தொண்டன்?

பீகார் முன்னாள் முதல்வர் நிதீஷ் குமாரின் மகனும், சுகாதாரத் துறை அமைச்சருமான நிஷாந்த் குமார் இன்று (செப். 5) முசாஃபர்பூர் தொகுதியின்  சாக்ரி சௌக் பகுதியில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அவருக்கு ‘ஐக்கிய ஜனதா தள’ கட்சியின் உறுப்பினர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், அக்கட்சியின் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டு அமைச்சர் நிஷாந்த் குமாருக்கு மலர்தூவி சிறப்பான வரவேற்பு அளித்தனர்.  

இந்நிகழ்ச்சியில், ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான ராஜேஷ் மண்டல் கலந்துகொண்டார். அப்போது, அவர் அணிந்திருந்த தங்க செயினை மர்ம நபர்கள் பறித்ததாகக் கூறப்படுகிறது. கூட்டத்தில் தங்க செயின் காணாமல் போனதை அறிந்து பதறிப்போன ராஜேஷ், அங்கும் இங்கும் தேடிப்பார்த்தார். இருந்தாலும், அந்த தங்க செயின் கிடைக்கவில்லை.  

இதனைத் தொடர்ந்து, உடனடியாக அங்கு பணியில் இருந்த காவலர்களிடம் அவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.   இருப்பினும், அவரது தங்க செயின் கிடைக்கவில்லை. இதனால், இது சம்பந்தமாக ராஜேஷ் துர்கி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான தங்க செயின் காணாமல் போனதால் அவர் கடும் மன உளைச்சலில் உள்ளார். இந்நிலையில், ராஜேஷ் பதற்றத்துடன் செயினை தேடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்குப் பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அதில், சிலர் தலைவனிடமே கைவரிசை காட்டிய, அந்த பலே தொண்டன் யார்? என்றும் கிண்டலத்து வருகின்றனர்.  

Source link