தாறுமாறாக ஓடி உயி@ரைப் பறித்த கார்- பதற வைக்கும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே அரங்கேறியுள்ள ஒரு கொடூர விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மது போதையில் மிதந்த வாலிபர்கள் ஓட்டி வந்த கார், அடுத்தடுத்து இரண்டு இடங்களில் பயங்கர விபத்துகளை ஏற்படுத்தியதில் ஒரு முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.

கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் படகுத்துறை பகுதிக்கு வந்த ஒரு கும்பல், அங்கு படகு சவாரி செய்துவிட்டு, பின்னர் மதுவிருந்து நடத்தியதாகக் கூறப்படுகிறது. போதை தலைக்கேறிய நிலையில் அவர்கள் தங்களது காரில் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். கார் ஓமசமுத்திரம் என்ற இடத்தை அடைந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த ஒரு பைக்கின் மீது மிக பலமாக மோதியுள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் மோதலில் பைக்கில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இந்த முதல் விபத்தின் சிசிடிவி காட்சிதான் தற்போது வெளியாகி பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளது.

பைக்கின் மீது மோதிய பிறகும் அந்த போதை கும்பல் காரை நிறுத்தவில்லை. மேலும் பயந்துபோய், அதிவேகமாக காரை இயக்கி தப்பி ஓட முயன்றுள்ளனர். அடுத்த சில நிமிடங்களில், சுண்ணாம்புகுளம் பஜார் பகுதியில் சாலையோரமாகப் பேசிக்கொண்டிருந்த பொதுமக்கள் கூட்டத்திற்குள் இந்தக் கார் தாறுமாறாகப் புகுந்தது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கொடூர சம்பவத்தில், மாசிலாமணி என்ற 65 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மேலும், அங்கிருந்த ஐந்து பேர் படுகாயமடைந்து உயிருக்காகப் போராடிய நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் விபத்தை ஏற்படுத்தி, ஒரு உயிரைக் குடித்த இந்த போதை கும்பல் மீது மிகக் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கொதித்தெழுந்துள்ளனர். மேலும், இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தடுக்கப் போலீசார் ஆங்காங்கே வாகன சோதனையை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது.

இந்த கோர விபத்து குறித்து ஆரம்பாக்கம் காவல் துறையினர் தற்போது வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link