கர்நாடகா மாநிலம், கொப்பல் மாவட்டத்தில் உள்ள காவலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஈரண்ணா (25). அவரது குடும்பத்தினர் ஈரண்ணாவை தங்களது விவசாய தோட்டத்திற்குச் சென்று வேலை செய்யுமாறு வற்புறுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், அவர்களது தோட்டத்தில் புலியின் நடமாட்டம் இருப்பதாகக் கூறி, ஈரண்ணா வேலைக்குச் செல்ல மறுத்தார். இது சம்பந்தமான வீடியோவையும் அவர் வீட்டில் உள்ளவர்களிடம் காண்பித்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், தங்கள் தோட்டத்தில் புலிகள் இருப்பதாக நினைத்து அச்சத்தில் இருந்துவந்தனர்.
இதனிடையே, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் பீதியடைந்தனர். இதையடுத்து, அவர்கள் இது சம்பந்தமாக வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த இடத்தில் புலிகளின் கால் தடம் எதுவும் தென்படாததால், அவர்கள் ஈரண்ணாவை அழைத்து விசாரித்தனர்.
அந்த விசாரணையில் நிலத்தில் புலிகள் நடமாடுவது போல் வெளியான வீடியோ செயற்கை நுண்ணறிவால் (ஏஐ) உருவாக்கப்பட்டது என்பதும், அதனை உருவாக்கியதே ஈரண்ணா தான் என்பதும் தெரியவந்தது. அதாவது, குடும்பத்தினர் தொடர்ந்து, தன்னை தோட்டத்திற்குச் சென்று வேலை பார்க்கச் சொல்லி வற்புறுத்தியதால், இவ்வாறு செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார். இதனைக் கேட்ட வனத்துறையினர் கடும் ஆத்திரமடைந்தனர்.
இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் ஈரண்ணாவை, வீடியோவில் இருந்த அதே குன்றிற்கு மீண்டும் அழைத்து வந்து, தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தியதை ஒப்புக்கொள்ளும் காட்சிகளை வீடியோவாக பதிவுசெய்தனர். மேலும், போலியான வீடியோவை பரப்பி மக்களுக்குப் பீதியை ஏற்படுத்தியதற்காகவும், வனத்துறையினர் நேரத்தை வீணடித்ததற்காகவும் அவருக்கு நூதன தண்டனை வழங்கினர். அதன்படி, அவரை பொதுமக்கள் முன்னிலையில், 50 தோப்புக்கரணம் போடும்படி அதிகாரிகள் வற்புறுத்தினர். மேலும், இது போன்ற செயல்களில் மீண்டும் ஈடுபடக்கூடாது எனவும் எச்சரித்தனர். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
