தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், த.வெ.க ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் 116 நாள் சாதனைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் விஜய், திங்கள்கிழமை அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிப்பதாகக் கூறிப் பேரவையில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைந்துள்ள த.வெ.க அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் 5-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மற்றும் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (03.09.2026) முதலமைச்சர் விஜய் பொறுப்பு வகிக்கும் காவல் துறை இலாகாக்கள் மீதான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றது.
காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு பற்றிய கேள்விகளுக்கு பழிபோடுதல், திசை திருப்பாமல் முதல்வ பதில் அளிப்பார் என எதிர்பார்க்கிறேன். திமுக ஆட்சியில் குற்றங்கள் குறைந்ததாக த.வெ.க அரசின் கொள்கை விளக்க குறிப்பே கூறுகிறது.
த.வெ.க அரசு பெறுப்பேற்றது முதல் புதிய திட்டங்களை விட ரத்து செய்த திட்டங்கள் அதிகம். திராவிட மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்ததை ஒப்புகொண்டமைக்கு நன்றி என்று அவர் கூறினார்.
மேலும், தி.மு.க ஆட்சியில் டாப்கியரில் சென்ற தமிழ்நாடு த.வெ.க ஆட்சியில் ரிவர்ஸ் கியரில் செல்கிறது. த.வெ.க அறிவித்த வாக்குறுதிகளை முழுமையாக செயல்படுத்தவில்லை. பாதியாக செயல்படுத்துவதாக அறிவிப்பு மட்டுமே வெளியிட்டுள்ளீர்கள்.
த.வெ.க அரசின் மொத்த திட்டங்களுக்கும் சேர்த்து தாய்மாமன் காது குத்தும் திட்டம் என பெயர் வைக்கலாம். திட்டங்கள் மக்களை சென்றடைவதை விட ரீல்ஸ் மட்டும் சென்றடைந்தால் போதும் என நினைக்கிறார்கள். காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை படிப்படியாக செயல்படுத்த வேண்டும் என்றும் தி.மு.க அரசு செய்ததுபோல் நீண்டநாள் சிறையில் இஸ்லாமிய கைதிகளுக்கு நீண்ட விடுப்பு வழங்க வேண்டும் . தமிழ்நாட்டில் கொலை நடக்காத நாட்களே இல்லை என்ற நிலை உள்ளது.
116 நாள் தவெக ஆட்சி தமிழ்நாட்டு பெண்களுக்கு மிகப்பெரிய ட்ராஜிடி. தவெக ஆட்சியில் 10 ஆணவக் கொலைகள் நடைபெற்றுள்ளன. கறிக்கடைகளை விட மோசமாக தமிழ்நாட்டில் வெட்டுக் குத்து நடக்கிறது. பெண் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தும் தவெக எம்எல்ஏ மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அமைச்சர் ஆனந்த் உணர்ச்சியில் பேசிவிட்டார் என்றால், உணர்ச்சி என்பது அனைவருக்கும் பொதுவானது.
தவெக நிர்வாகிகள் மீதான பாலியல் புகார்களைப் பட்டியலிட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். தவெக ஆட்சிக்கு வந்த 116 நாட்களில் 8 காவல், சிறை மரணங்கள் நிகழ்ந்துள்ளன. சாரி வேண்டாம் நீதி வேண்டும் என்று ஆட்சிக்கு வரும் முன்பு கூறியவர் முதல்வர் விஜய். பாலியல் புகாரில் சிக்கிய தவெக நிர்வாகிகள் அமைச்சர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். காவல், சிறை மரணங்கள் மீது முதலமைச்சர் எடுத்த நடவடிக்கைகள் என்ன? தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிக மிக மோசமான நிலையில் உள்ளது. முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள உள்துறை, உளவுத்துறை மொத்தமாக செயலிழந்து போய்விட்டது.
எங்களுக்கு வந்தா ரத்தம், அவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? முதல்வரை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களை கைது செய்வதில் தவெக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. முதல்வரை நேரடியாக விமர்சிக்கும் பாஜக தலைவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அனிதா நினைவேந்தலுக்கு கூட தவெக அரசு அனுமதி தரவில்லை; அனுமதியின்றியே நிகழ்ச்சி நடந்தது. இடதுசாரிகளை கணக்கெடுக்க வட்டாட்சியர் உத்தரவிட்டது தலைமைச் செயலாளர் உத்தரவுப்படி நடந்ததாக புகார் அளிக்கப்பட்டது.
இடதுசாரிகளை கணக்கெடுக்க உத்தரவிட்டது முதலமைச்சர் விஜய்க்கு தெரியுமா? எதிர்க்கட்சியினர் எழுப்பிய எந்த கேள்விக்கும் இதுவரை முதலமைச்சர் விஜய் பதில் அளிக்கவில்லை. டிவி சீரியல்களில் இவருக்கு இவர் என்று போடுவதுபோல, பேரவையில் அமைச்சர்கள் பதில் அளிக்கின்றனர். பேரவையில் ஆளும்கட்சி எப்படி நடந்து கொள்கிறதோ அதுபோலத்தான் எதிர்க்கட்சி நடந்துகொள்ளும். முதலமைச்சர் கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருப்பதாக இன்னும் நம்புகிறோம்.
த.வெ.க ஆட்சிக்கு வந்த 116 நாட்களில் 300க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன. த.வெ.க ஆட்சிக்கு வந்த 116 நாட்களில் 200க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. த.வெ.க-வின் 116 நாள் ஆட்சியில் 550க்கும் மேற்பட்ட குற்றங்கள் நடைபெற்று உள்ளன. முதலமைச்சர் பதிலுரைக்கு இன்னும் 3 நாட்கள் இருப்பதால் நன்றாக தயாரித்துக் கொண்டு வரலாம். முதலமைச்சர் விஜய் தயார் என்றால் விவாதத்துக்கு இப்போதே பதில் சொல்லட்டும்.
தி.மு.க-தான் இன்றும் ஆட்சி செய்கிறது என்ற நினைப்பை முதல்வர் மனதில் இருந்து எடுக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் கேள்விக்கு விதண்டாவாதம் செய்யாமல் பதில் தரவேண்டும் என்றும் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பற்றிய கேள்விகளுக்கு ஸ்டாலின் பொறுமையாக, பொறுப்பாக பதிலளித்தார். லாஜிக் இல்லாத குட்டி கதை பேசாமல் முதல்வர் நேரடியாக பேச வேண்டும்” என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், “அனைத்து கேள்விகளுக்கும் திங்கள்கிழமை பதிலளிப்பேன். நான் இங்கு இல்லை என்றாலும், இங்கு எழுப்பப்படும் அனைத்து கேள்விகளையும் நான் அறிவேன். ஒரே ஒரு கோரிக்கை வைக்கிறேன், நான் பதிலளிக்கும் போது யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது” என்று கூறினார்.
