சென்னை: துாத்துக்குடி மாவட்டத்தில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதை தமிழக அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழுவிடம் நடத்திய பேச்சில், எச்.டி.ஹூண்டாய் நிறுவனம் உறுதி செய்துள்ளது. விரிவான தொழில்நுட்ப திட்ட அறிக்கை தயாரிக்கும் நிலைக்கு இத்திட்டம் முன்னேறியுள்ளது.
துாத்துக்குடி மாவட்டத்தில் வ.உ.சி., துறைமுகம் அருகில், 18,000 கோடி ரூபாய் முதலீட்டில் கப்பல் கட்டும் தளம் அமைக்க தமிழக அரசுடன், தென் கொரியா நாட்டை சேர்ந்த ஹெச்.டி.ஹூண்டாய் நிறுவனம், 2025ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. அந்நிறுவனத்தின் எச்.டி., கே.எஸ்.ஓ.இ., கப்பல் கட்டுமானம் மற்றும் கடல்சார் துறையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், துாத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க உள்ளது.
தமிழகத்தில், இந்தாண்டு ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அந் நிறுவனத்தின் முதலீட்டை ஈர்க்கும் முயற்சியில் ஆந்திர அரசு ஈடுபட்டது. எச்.டி., ஹூண்டாயின் முதலீட்டை தக்க வைக்க தமிழக அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு நடத்தினர்.
எச்.டி., கே.எஸ்.ஓ.இ.,நிறுவனத்தின் சன்ஜுன் ஹாங் தலைமையி லான மூத்த குழு, கடந்த 1ம் தேதி முதல், ஒரு வாரம் துாத்துக்குடியில் முகாமிட்டு இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தது.
அக்குழு, சென்னை தலைமை செயலகத்தில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, செயலர் விஜயகுமார் உள்ளிட்டோருடன் நேற்று முன்தினம் பேச்சு நடத்தி யது. அப்போது, தமிழகத்தில் திட்டத்தை முன்னெடுத்து செல்வதாக, உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
