புதுடில்லி: தூய்மையான காற்று கொண்ட நகரங்களின் பட்டியலில் தமிழகத்தில் உள்ள திருச்சி சிறந்த தரநிலையைப் பெற்றுள்ளது. தலைநகரான சென்னைக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் செப்டம்பர் 7ம் தேதி தூய்மையான காற்று தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தூய்மையான காற்றை நிலைக்கச் செய்து, பொதுமக்கள் ஆரோக்கியமான வாழ வழிவகை செய்யும் விதமாக, தூய்மையான நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டு, அதற்கு விருதும் வழங்கி வருகிறது.
அந்த வகையில், இந்தாண்டுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட நகரங்களின் பட்டியலில் மத்திய பிரதேசத்தின் இந்தூரை (197) விட வெறும் ஒரு புள்ளிகள் முன்னிலையில் உத்தரபிரதேசத்தின் லக்னோ (198) முதலிடம் பிடித்துள்ளது. ஜபல்பூர் (195) 3வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தப் பெருநகரப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 3 நகரங்கள் மட்டுமே இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. சிறப்பாக செயல்பட்டு வரும் திருச்சி (183) 12வது இடத்தை பிடித்துள்ளது. அடுத்ததாக தமிழக தலைநகரான சென்னை 35வது இடத்திலும், மதுரை 39வது இடத்திலும் உள்ளன. காற்று மாசுபாட்டில் அதிகம் பாதித்துள்ள டில்லியே 21வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, முக்கிய நகரங்களான ஹைதராபாத் 19வது இடத்திலும், மும்பை 28வது இடத்திலும், பெங்களூரு 32வது இடத்திலும், கோல்கட்டா 38வது இடத்திலும் உள்ளன.
அதேபோல, மிகக் குறைந்த அளவிலான மக்கள் தொகை (3 லட்சத்திற்கும் குறைவான) கொண்ட நகரங்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த தூத்துக்குடி மட்டும் 35வது இடம் பிடித்துள்ளது. ஒடிசாவின் ரூகெலா முதலிடம் பிடித்துள்ளது. உத்தரபிரதேசத்தின் பைரஷோபாத் 2வது இடத்தையும், ஆந்திராவின் குண்டூர், அமராவதி நகரங்கள் முறையே 3 மற்றும் 4வது இடங்களை பிடித்துள்ளன.
