பிரிட்டனில் தொழில்நுட்பக் கோளாறால் விமான நிலையங்கள் முடக்கம்; 600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

லண்டன்: பிரிட்டனில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடு முழுவதும் 600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

பிரிட்டன் வான்வழி போக்குவரத்துட்டுப்பாட்டு அமைப்பில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. லண்டன் ஹீத்ரோ, காட்விக், ஸ்டான்ஸ்டெட் , மான்செஸ்டர் மற்றும் ஸ்காட்லாந்து விமான நிலையங்கள் பாதிக்கப்பட்டன.

புறப்பட வேண்டிய விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. வருகை தரும் விமானங்கள் வழக்கம்போல் இயங்கின. ஆனாலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இதுவரை 625 விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளன. தங்கள் விமானங்கள் ரத்து செய்யப்படுவதற்கு முன்பு, பல மணிநேரம் விமானத்திலேயே சிக்கி தவித்ததாக பல பயணிகள் தெரிவித்தனர்.

பல பயணிகள் தங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் கடும் சிரமம் அடைந்தனர். இந்த பிரச்னையை சரி செய்து இயல்பு நிலைக்கு கொண்டு வரும் பணி நடந்து வருகிறது. இது குறித்து பிரிட்டன் வான்வழி போக்குவரத்துட்டுப்பாட்டு அமைப்பு கூறியதாவது:

தொழில்நுட்ப பிரச்னையை நாங்கள் கண்டறிந்துள்ளோம். எங்கள் குழுவினர் சம்பவ இடத்தில் உள்ளனர்; இயல்பு நிலையை விரைவில் மீட்டெடுக்க அவசரமாகப் பணியாற்றி வருகின்றனர். பயணத்தில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான இடையூறுகளை நாங்கள் உணர்கிறோம்; அதற்காக மன்னிப்பைக் கோருகிறோம்,’ என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையே மும்பையிலிருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் சுவிட்சர்லாந்து சூரிச் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது; இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

Source link