த.வெ.க ஆதரவு கட்சிகளின் 2-வது கூட்டத்திற்கு அமைச்சர்கள் அழைப்பு: வைகோ உள்ளே; சி.பி.ஐ வெளியே

த.வெ.க ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்த தோழமைக் கட்சிகளின் இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகின்றனர். இக்கூட்டத்தில் ம.தி.மு.க நிச்சயம் பங்கேற்கும் என்றும் த.வெ.க ஆட்சி ஊழலற்ற முறையில் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும் வைகோ புகழாரம் சூட்டியுள்ளார். அதேநேரத்தில், த.வெ.க அமைக்கும் கூட்டணியிலோ அல்லது அமைச்சரவையிலோ பங்கேற்பதில்லை என்பதில் தங்கள் கட்சி உறுதியாக இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

த.வெ.க ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்த தோழமைக் கட்சிகளின் 2-வது கட்ட ஆலோசனைக் கூட்டம் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த ஜூலை 1-ஆம் தேதி கோவளத்தில் முதல் கூட்டம் நடைபெற்ற நிலையில், இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு வீரபாண்டியன், பெ.சண்முகம் உள்ளிட்டோருக்கு அமைச்சர்கள் நேரில் அழைப்பு விடுத்தனர்.

தொடர்ந்து வைகோவை சென்னை அண்ணா நகரிலுள்ள அவரது இல்லத்தில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.

காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்களையும் அமைச்சர்கள் நாளை சந்திக்கவுள்ள சூழலில், நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் கூட்டணிக்கு பெயர் வைப்பது தொடர்பாக முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளது.

அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் உடனான சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க) ஆதரவு கட்சிகளின் இரண்டாம் கட்ட கூட்டம் வரும் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், அக்கூட்டத்தில் கலந்துகொள்ள தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் கண்டிப்பாகப் பங்கேற்போம் என்றும் தெரிவித்தார். மேலும், சட்டப்பேரவையில் முதலமைச்சர் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகப் பாராட்டிய அவர், த.வெ.க-வின் 110 நாட்கள் ஆட்சியில் ஊழலை ஒழிப்பதற்காகத் தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகப் புகழாரம் சூட்டினார்.

முதலமைச்சர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள அந்தக் கூட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க.) அவசியம் கலந்து கொள்ளும். இதன் மூலம் மக்களுக்கு ஒரு தெளிவு ஏற்படும். ஆளுங்கட்சியாக இருப்பவர்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவைப் பெருக்குவதற்கான வாய்ப்பாக இது அமையலாம். இருப்பினும், சட்டப்பேரவை நிகழ்வுகள் தொலைக்காட்சிகளில் முழுமையாக ஒளிபரப்பப்படுவது ஒட்டுமொத்த நிர்வாகத்துக்கும், ஜனநாயகத்துக்கும் நல்லது.

நாட்டின் நிர்வாக நடைமுறைகளைப் பற்றி அனைவரும் நன்றாக அறிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்படுவதற்கும் இது வாய்ப்பாக அமைந்திருக்கிறது. ஆளுங்கட்சி தரப்பில் எதிர்க்கட்சியினரிடமிருந்து எத்தகைய கணைகள் பாய்ந்தாலும், அவற்றை இடைமறித்து சிறப்பாக பதிலளிக்கக்கூடிய ஆற்றலை அமைச்சர்கள் பெற்றிருக்கிறார்கள். அதை அவர்கள் சிறப்பாகச் செய்து வருகிறார்கள்.

முதலமைச்சர் அன்று சட்டப்பேரவையில் ஆங்கிலத்தில் உரையை வாசித்தபோது, அவர் தயாராக வந்து வாசித்த விதமும், அவரது உச்சரிப்பும் மிகவும் சிறப்பாக இருந்தது. அது ஒரு மிகச் சிறந்த தொடக்க நிகழ்வாக அமைந்தது. “அன்றைய தினம் சட்டமன்றத்தில் மாண்புமிகு முதலமைச்சரின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்தது.”

“ஊழலை ஒழிப்பது ஒன்றே எங்கள் குறிக்கோள்” என்று கூறியதோடு மட்டும் நின்றுவிடாமல், இன்று ஆர்.டி.ஓ. அலுவலகமாக இருந்தாலும், பதிவுத்துறை அலுவலகமாக இருந்தாலும், எங்கு சென்றாலும் “கமிஷன்” என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில் ஊழலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊழலை ஒழிப்போம் என்ற குறிக்கோளை நிறைவேற்றுவதில் இந்த அரசு வெற்றி பெற்று வருகிறது. ஒரு ஆட்சிக்கு இதைவிடச் சிறப்பான செயல்பாடு வேறு எதுவும் இருக்க முடியாது.

செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெற உள்ள நிகழ்வில் த.வெ.க. கட்சிக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாகவும் ம.தி.மு.க. தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும்.

இவ்வாறு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

த.வெ.க-வின் அழைப்பு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், த.வெ.க அமைக்கும் கூட்டணியிலோ அல்லது அமைச்சரவையிலோ இடம்பெறுவதில்லை என்பதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். த.வெ.க அழைப்பு மற்றும் விருந்து குறித்துப் பேசிய அவர், “நாங்கள் கூட்டணியில் பங்கேற்கவில்லை என்பதால் விருந்தின் தன்மை கெடக்கூடாது என்பதற்காகவே முன்கூட்டியே முதலமைச்சரைச் சந்தித்து நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி வாழ்த்துகளைத் தெரிவித்தோம். மாநிலத்தை ஆளும் கட்சி முன்வைக்கும் கருத்துகளுக்கு மதிப்பளித்து அது குறித்துக் கட்சி கூடி முடிவெடுக்கும். பா.ஜ.க-வை வீழ்த்துவதும், தேசத்தை இடதுசாரி திசைவழியில் திருப்புவதுமே எங்களின் முதன்மை அரசியல் நோக்கம்; தமிழ்நாட்டில் ‘இந்தியா’ கூட்டணி போன்ற ஒரு அமைப்பைத் த.வெ.க உருவாக்க முயன்றாலும், இடதுசாரிகளின் தனித்துவத்தைப் பாதுகாத்தே எங்களின் முடிவுகள் அமையும். த.வெ.க மதச்சார்பின்மையைப் பின்பற்றும் வரை விமர்சிப்போம்; அதைத் தாண்டினால் பா.ஜ.க-வைப் போலவே எதிர்ப்போம்” எனத் திட்டவட்டமாகக் கூறினார்.

Source link