நடுக்கடலில் குதித்து உயிர் தப்பிய இந்தியர்கள்.. வளைகுடாவில் திக்திக்.. ஒரு இந்திய மாலுமி மாயம்!

டெல்லி: ஓமன் கடற்கரையில் இந்திய மாலுமிகள் இருந்த வணிகக் கப்பல் ஒன்று திடீரென தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான அந்த கப்பலில் இருந்த 14 இந்தியர்களில் 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், மாயமான ஒரு இந்திய மாலுமியை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் கடந்த சில காலமாகவே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. அமெரிக்கா ஈரான் இடையே நேரடி தாக்குதல்கள் குறைந்துவிட்டாலும் ஆங்காங்கே தாக்குதல்கள் தொடர்கிறது. குறிப்பாக வணிக கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கிறது.

இந்தச் சூழலில் தான் மீண்டும் இன்றைய தினம் ஓமன் கடற்கரையில் இந்திய கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. MT El Gaia என்ற வணிகக் கப்பல் மீது இன்று ஓமன் கடற்கரைக்கு அருகே தாக்குதல் நடத்தப்பட்டதுள்ளது. இதை இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், “ஓமன் கடற்கரைக்கு அருகே MT El Gaia என்ற வணிக கப்பல் மீது இன்று நடத்தப்பட்ட தாக்குதலை கண்டிக்கிறோம். அந்த கப்பலில் இருந்த 14 இந்திய மாலுமிகளில் 13 இந்தியர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். மாயமான ஒரு இந்தியரை தேடும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தூதரகம் ஓமன் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், மாயமான இந்தியரை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. பனாமா நாட்டை சேர்ந்த வணிக கப்பல் மீதான தாக்குதலில் மாயமான இந்தியர்களை தேடும் பணிகளை கண்காணித்து வருவதாக ஓமனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. 13 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தூதரகம், அவர்கள் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் மாயமான மற்றொரு இந்தியரை தேடும் பணியை ஓமன் அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பகுதியில் தொடர்ந்து பதற்றமும் மோதல்களும் நிலவி வரும் நிலையில், அந்த பகுதியில் செல்லும் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. மேலும், பதற்றத்தை உடனடியாக தணித்து, பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியான நடவடிக்கைகள் மூலம் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் வெளியுறவு துறை அமைச்சகம் கூறியுள்ளது.

வணிக கப்பல்கள், கடற்படை ஊழியர்கள், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது ஏற்று கொள்ள முடியாதது என்றும் இந்தியா கூறியுள்ளது. சர்வதேச கடல்வழிகளில் கப்பல்கள் பாதுகாப்பாக செல்லவும், வர்த்தக போக்குவரத்து தடையின்றி நடைபெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

மத்திய கிழக்கில், குறிப்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா மோதலின் முக்கிய பகுதியாக மாறியுள்ள ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியர்கள் இருக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே இந்தியக் கப்பல்கள் மற்றும் இந்தியர்கள் பணியாற்றும் கப்பல்கள் பல முறை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. கடந்த மாதம், இந்தியக் கொடியுடன் சென்ற வணிகக் கப்பல் ஏமன் கடற்கரைக்கு அருகே செங்கடலில் மூழ்கியது. நல்வாய்ப்பாக அதில் இருந்த 13 இந்தியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

முன்னதாக டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும் கடல் வணிகம் பாதுகாப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.