சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் அரங்கில் நடைபெற்ற ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழாவில், படம் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் திரையரங்கு அனுபவத்தின் முக்கியத்துவம் குறித்து படக்குழுவினர் தங்களது உணர்வுப்பூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.
இயக்குநர் பாலாஜி இயக்கத்தில், பிக்பாஸ் நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இந்த நாட்டார் கதை பின்னணி கொண்ட சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் திரைப்படம் வரும் செப்டம்பர் 18 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.
நட்சத்திர பட்டாளம்
‘தி டார்க் ஹெவன்’ படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா , ரித்விகா ஆகியோருடன் , வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே,படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம், இசை: சக்தி பாலாஜி, பாடல் வரிகள்: லாவர்தன். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ளன.
கொலையும் கொலை சார்ந்த ஒரு துப்பறியும் கதையாக உருவாகி இருக்கும் இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி ,ராமநாதபுரம், குற்றாலம் ,முக்கூடல்,தென்காசி போன்ற பகுதிகளில் இதுவரை கேமரா வெளிச்சம் படாத இடங்களில் தேடிப் பிடித்துப் படப்பிடிப்பு செய்துள்ளார்கள்.
இப்படத்தில் தனது அனுபவங்களை இயக்குனர் மற்றும் படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.
இயக்குனர் – பாலாஜி
பாதியில் நின்ற படத்தை மீண்டும் எடுத்து முடிப்பது மனரீதியாக பெரும் அழுத்தம் என்றும், அந்த நெருக்கடியில் சரண், கோபால் மற்றும் படக்குழுவினர் உறுதுணையாக இருந்ததாகவும், கடந்த காலத்தை பற்றி கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்ட சித்து மீது பெரும் மரியாதை ஏற்பட்டதாகவும் கூறிய இயக்குநர் பாலாஜி, இது நாட்டார் கதையை மையமாக கொண்ட த்ரில்லர் என்றும் ரித்விகாவின் வருகைக்கு பிறகு படத்தின் தரம் உயர்ந்ததாகவும் தெரிவித்தார்.
படத்தைப் பார்த்து விட்டு உங்கள் உங்கள் நேர்மையான விமர்சனங்களைச் சொல்லுங்கள் .நல்லதைக் கேட்டுக்கொள்கிறோம். கேட்டதை மாற்றிக் கொள்கிறோம் என்றும் கூறினார்.
நடிகை – ரித்விகா
பெரிய படங்களால் தள்ளிப்போன ‘தி டார்க் ஹெவன்’ செப்.18-ல் உறுதியாக வெளியாகிறது என்றும், ஒரே மாதிரியான த்ரில்லர் படங்களுக்கு மத்தியில் இது வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை தரும் என்றும், ஒரு ஷாட்டுக்காக மணிக்கணக்கில் காத்திருந்து இருமடங்கு உழைப்பை படக்குழு கொடுத்துள்ளதாகவும் நடிகை ரித்விகா தெரிவித்தார்.
கதை நாயகன் – சித்து
சாலிகிராமத்தில் சின்ன வேடங்களுக்காக அலைந்த தனக்கு இதுவே முதல் படம் என்பதே சாதனை என்றும், முதல் படத்திலேயே கிடைத்தற்கரிய காப் ஸ்டோரி – த்ரில்லர் கதாபாத்திரம் கிடைத்தது அதிர்ஷ்டம் என்றும், பழைய கதை பற்றி கவலைப்படாமல் படத்தை மேலே கொண்டு செல்வதில் கவனம் செலுத்தியதாகவும், படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ளும் அனுபவமாக இருந்ததாகவும் நாயகன் சித்து தெரிவித்தார்.
இசையமைப்பாளர் – சக்தி பாலாஜி
நான் ஏற்கெனவே ’உடன்பால்’, ’ஜாக்கி ’ படங்களுக்கு இசையமைத்து இருக்கிறேன். ஆனால் முதல்முறையாக க்ரைம் த்ரில்லர் படத்திற்கு இசையமைத்தது மறக்க முடியாத அனுபவம் என்றும், இப்படம் பெரிய படத்திற்குரிய திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என்பதால் அனைவரும் திரையரங்கில் வந்து பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பிக் பாஸ் புகழ் – தர்ஷிகா
‘தி டார்க் ஹெவன்’ தான் தனது முதல் படம் என்றும், த்ரில்லர் படங்கள் மிகவும் பிடிக்கும் என்பதால் இப்படம் அனைவரும் விரும்பும் படமாக இருக்கும் என நம்புவதாகவும், படத்திற்காக அனைவரும் கடினமாக உழைத்துள்ளதால் செப்.18-ல் திரையரங்கில் பார்த்து ஆதரிக்குமாறும் நடிகை தர்ஷிகா கேட்டுக்கொண்டார்.
ஒளிப்பதிவாளர் – மணிகண்டன்
இயக்குநர் பாலாஜியுடன் ‘டி3’க்கு பிறகு இது இரண்டாவது படம் என்றும், க்ரைம் த்ரில்லருக்காக அழகும் மர்மமும் நிறைந்த இடங்களை தேடி கண்டுபிடித்து, வாகனம் செல்ல முடியாத காடு, மலை பகுதிகளுக்கு கருவிகளை சுமந்து சென்று சிரமப்பட்டு படமாக்கியதாகவும், ஆனால் காட்சிகளை பாராட்டும்போது அந்த சிரமம் மறந்து விடுவதாகவும் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
