தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று புதன்கிழமை நடைபெற்ற வினாக்கள் விடை நேரத்தின் போது, சுகாதாரத்துறை தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் பதில் அளித்தார்.
நாக தோஷம் – ஓ.பி.எஸ் பேச்சு
அப்போது, தி.மு.க. எம்.எல்.ஏ. ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், “சட்டமன்ற கூட்டம் ஆரம்பித்து அமைச்சர் பாம்பு கடி தொடர்பாக உரிய விளக்கத்தை அளித்து வருகிறார். இன்றைக்கு நான் அறிந்தது, பல்வேறு நிறைய தொகுதிகளில் பாம்பு கடி உள்ளதாக அறிகிறேன். அந்த தொகுதிகளில் எல்லாம் தோஷம் இருப்பதாக நான் அறிகிறேன். ஆகவே, பேரவை தலைவர் முன்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், நாக தோஷம் கழிப்பதற்கு ஏதாவது பிரார்த்தனைகள் இருந்தால் அதனை நிவர்த்தி செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார்.
பதிலடி
இதற்கு பதில் அளித்த அமைச்சர் அருண்ராஜ், “முதலமைச்சர் தலைமையிலான அரசு அறிவியல் பூர்வமான அரசாக மேற்கொண்டு இருக்கிறோம். தோஷம், பில்லி சூனியம் எல்லாம் நம்பிக்கை இல்லை. உறுப்பினருக்கு நம்பிக்கை இருந்தால் உங்களுடைய தொகுதிக்கு தோஷம் நிவர்த்தி மேற்கொள்ளலாம். மாநில அளவில் அறிவியல் பூர்வமான முயற்சிகள் மட்டும் தான் நாம் எடுப்போம். ஜலதோஷம் தான் அதிகம் இருக்கு. பாம்பு கடி தோஷம் எல்லாம் இருக்குற மாதிரி நாம் கேள்விபடலை” என்று கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், “அமைச்சர் விரும்பினால் இந்த தோஷம் கழிப்பதற்கு உரியவர்களை அனுப்பி வைப்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் அருண்ராஜ், “தோஷத்தில் நம்பிக்கையும் இல்லை. விருப்பமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
அப்போது, அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், “பெரியார் இயக்கம் பற்றி பேசிய தி.மு.க இன்று, தோஷம் பற்றி பேசிக்கிட்டு இருக்காங்க. நாங்கள் பெரியார் வழியில் வந்தவர்கள். அறிவியல் பூர்வமாக இந்த பிரச்சனையை அணுக கூடியவர்கள் என்பதை இங்கே பதிவு செய்கிறேன்” என்று தெரிவித்தார்.
கேள்வி
இந்நிலையில், முன்னாள் முதல்வரும், தி.மு.க. எம்.எல்.ஏ-மான ஓ.பன்னீர் செல்வம் பேசிய நாக தோஷம் பேச்சு குறித்து விடுதலை ராஜேந்திரன் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதுபற்றி அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், “தனது தொகுதியில் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அதைத் தடுப்பதற்கு நாக தோஷம் என்ற சடங்கை நடத்த வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சரும் இப்போது தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான ஓ. பன்னீர்செல்வம் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இது நகைச்சுவைக்கான பேச்சு என்று திசை திருப்பி விட முடியாது. இது போன்ற பேச்சுகள் பெரும்பாலும் வட மாநில சட்டமன்றங்களில் தான் பேசப்படும். இப்போது தமிழ்நாடு சட்டமன்றத்திற்கே வந்துவிட்டது. ஆனால், உடனடியாக அமைச்சர் ஆதவன் அர்ஜுனா எங்களுக்கு இவைகளில் நம்பிக்கை இல்லை. நாங்கள் பெரியார்வழி நடப்பவர்கள் என்று பதில் அளித்தது பாராட்டி வரவேற்க வேண்டிய ஒன்று.
பெரியார் கொள்கையை ஏற்றுக் கொண்ட தி.மு.க-விலிருந்து இப்படி ஒரு கருத்து வரலாமா என்று அவர் கேட்டிருக்கிறார். முதலமைச்சரை ஆஸ்தான ஜோதிடர்தான் வழி நடத்துகிறார் என்று முதலமைச்சரின் மூடநம்பிக்கையை எதிர்க்கும் போது இப்படி “நாகதோஷ” மூடநம்பிக்கைகளை தி.மு.க உறுப்பினர்வெளிச்சம் போட்டு காட்டலாமா? வைதீக மூடச்சடங்குகளில் ஆர்வமும் நம்பிக்கையும் கொண்டவர் ஓ.பி.எஸ். அவர் இப்போது தி.மு.க-வின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
பாம்புகள் மீதான பல மூடநம்பிக்கைகளில் பாமர மக்கள் மூழ்கி இருக்கிறார்கள். இந்த மூட நம்பிக்கைகளை மறுக்கும் அறிவியல் விளக்கங்கள் ஏராளமாக வந்து விட்டன. தமிழ்நாட்டில் மந்திரவாதிகளிடம் ஏமாறுவதும் பேய் பில்லி சூனிய நம்பிக்கைகளில் வாழ்க்கையை தொலைப்பதும் அதிகரித்து வரும் நிலையில், மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் ஒன்றை ஏற்கனவே கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருப்பது போல், தமிழ்நாடு அரசும் கொண்டு வர வேண்டும். திராவிடர் விடுதலைக் கழகம் கடந்த ஆகஸ்ட் 12 அன்று காரைக்குடியில் நடந்த மாநாட்டில் இந்த கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றியதை சுட்டிக் காட்டுகிறோம்.” என்று அவர் கூறியுள்ளார்.
