நாட்டில் பிரிவினைவாத அரசியல் எடுபடாது: அமித்ஷா

புதுடில்லி: நாட்டை வடக்கு – தெற்கு என பிரிப்பதை ஏற்க முடியாது. நாட்டில் ஒரு போதும் பிரிவினைவாத அரசியல் எடுபடாது என லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

தொகுதி மறுவரையறை, மகளிர் இட ஒதுக்கீடு குறித்த மசோதாக்கள் மீதான விவாதத்தக்கு பதிலளித்து அமித்ஷா பேசியதாவது: மகளிர் இட ஒதுக்கீட்டுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், உன்னிப்பாக கவனித்தால், இண்டி கூட்டணி எம்பிக்கள் அனைவரும் ஏதோ காரணங்களை கூறி எதிர்ப்பது தெரிய வரும்.எங்களது கவனம் நோக்கத்தின் மீது அல்ல. மாறாக அதை செயல்படுத்தும் முறை மீது உள்ளது.அமல்படுத்தும் முறையில் மட்டும் எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக, மகளிர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளனர் என்பதை இந்த அவையின் வாயிலாக எதிர்க்கட்சிகளுக்கு தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.

2029 ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மகளிர் இட ஒதுக்கீட்டுடன் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே இந்த மூன்று மசோதாக்களின் நோக்கம் ஆகும்.மகளிர் நலனுக்காக மசோதா தாக்கல்செய்யப்பட்டுள்ளது. பட்டியலின மக்களுக்கான தொகுதிகள் அதிகரிப்பதையும் எதிர்க்கட்சிகள் தடுக்கின்றன. தொகுதி மறுவரையறையை எதிர்ப்பவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கான தொகுதி எண்ணிக்கை அதிகரிப்பதையும் தடுக்கின்றனர்.

இந்திரா ஆட்சி காலத்தில் லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிப்பது நிறுத்தப்பட்டது. அதனால் தற்போது மகளிர் இட ஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையுடன் இணைக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஒரு சில தொகுதிகளில் மக்கள் தொகை எண்ணிக்கை சில லட்சங்கள். வேறு சில தொகுதிகளில் மக்கள் தொகை எண்ணிக்கை 45 லட்சமாக உள்ளது.தொகுதிகளில் மக்கள் தொகை வேறுபாடு உள்ளதால் மறுவரையறை என்பது மிகவும் முக்கியம்.மக்கள் தொகை 140 கோடியை தொட்டபோதும் 50 ஆண்டுகளாக எம்பிக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதிகளை பிரித்தால், தமிழகத்தில் 6 தொகுதிகள் குறையும் . தற்போதைய நோக்கம் அதுவல்ல. நாட்டை தெற்கு வடக்கு என பிரிக்கும் அரசியல் இங்கு எடுபடாது.வெற்று விளம்பரத்துக்காக தெற்கு வடக்கு என அரசியலை எதிர்க்கட்சிகள் செய்கின்றனர். மாநிலங்களுக்கு இடையே மத்திய அரசு எந்த பாகுபாட்டையும் பார்க்கவில்லை. சத்தமாக பேசுவதால் பொய் உண்மையாகிவிடாது. பிரிவினைவாத அரசியல் ஒரு போதும் எடுபடாது.

தமிழகத்தில் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.தமிழகத்தில் மொத்த லோக்சபா தொகுதிகளில் 20 பெண்களுக்கு ஒதுக்கப்படும். தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து எந்த சந்தேகமும் தேவையில்லை. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Source link