கொச்சி: காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரத்தை தொடர்ந்து, ராஜ்யசபா சுயேச்சை எம்.பி., கபில் சிபலும், தான் ஒரு அறிவுசார் நக்சல் என்பதில் பெருமை கொள்வதாக தெரிவித்துள்ளார்.
டில்லி செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, ‘ஆயுதமேந்திய நக்சல்களை ஒழித்து விட்டோம். ஆனால், அறிவுசார் நக்சல்கள் இன்னும் நம்முடன் தான் இருக்கின்றனர்’ என, எச்சரித்திருந்தார்.
இதை மேற்கோள் காட்டி பேசிய காங்., மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சிதம்பரம், அறிவுசார் நக்சல் என்பதில் பெருமை கொள்வதாக கூறினார்.
இந்நிலையில், கேரளாவின் கொச்சியில், ‘குதிரை பேரம் மற்றும் ஜனநாயகம்’ என்ற தலைப்பில் நேற்று நடந்த கருத்தரங்கில் பங்கேற்று, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், காங்கிரசிலிருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல் பேசியதாவது:
நான் ஓர் அறிவுசார் நக்சல். இந்த உண்மையை அப்பட்டமாக ஒப்புக்கொள்ள விரும்புகிறேன். அந்த காலத்தில், குதிரை பேரம் என்றால் குதிரைகளை விற்பது. அதை விற்பவர்கள் சில தந்திரங்களை கையாள்வர்.
ஆனால், இன்றைய அரசியல் சூழலில் குதிரை பேரம் என்பது வேறு பரிமாணத்திற்கு மாறி விட்டது. தேர்தலுக்கு பின், எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கும் அரசியல்வாதிகளே தந்திரம் செய்கின்றனர். ஜனநாயகத்தின் ஆணிவேரை அசைக்கும் இந்த குதிரை பேரம், வெறும் அரசியல் ஊழல் மட்டுமல்ல; அரசியல் சாசனத்திற்கு அளிக்கும் நெருக்கடியாகவே நீடிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
