நீங்க நடிச்சா என் கேரக்டர் இல்லாம போய்டும்; ஊர்வசிக்கு போன் செய்த ரஜினிகாந்த்: எந்த படத்திற்கு தெரியுமா?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுதுள்ள ஊர்வசி, கமல்ஹாசன், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்திருந்தாலும், ரஜனிகாந்துடன் அவர் நடித்ததே இல்லை. இது குறித்து அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 

முந்தானை முடிச்சு திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான ஊர்வசி, மலையாள சினிமாவில் பல்வேறு அழுத்தமான பாத்திரங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, காமெடி வேடங்களில் ஊர்வசியின் நடிப்பு ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும். முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள ஊர்வசி, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். 

அதேபோல் நடிப்பு மட்டும் இல்லாமல், மற்ற நடிகைகளுக்கு டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியுள்ள ஊர்வசி, மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, தெலுங்கில் சிரஞ்சீவி, கன்னடத்தில் ராஜ்குமார், இந்தியில் ஜித்தேந்திரா என மற்ற மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும், தமிழில் இரு துருவங்களில் ஒருவரான கமல்ஹாசனுடன் மட்டுமே நடித்துள்ளார். ரஜினிகாந்த் – ஊர்வசி இதுவரை இணைந்து ஒரு படம் கூட நடிக்கவில்லை. 

இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள ஊர்வசி, ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டும் என்பது எனக்கு ரொம்ப ஆசை. அவரது காமெடி சின்ன பசங்க மாதிரி இருக்கும். அவருடன் நடிக்க வந்த முதல் வாய்ப்பு நல்லவனுக்கு நல்லவன் படம். அதில் அவருக்கு மகளாக நடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். அப்போது எனது மேனேஜராக இருந்த ஒருவர், மகளாக நடித்தால் பின்னால் ஜோடியாக நடிக்க முடியாது என்று சொல்லி, எனக்கு தெரியாமலே அந்த வாய்ப்பை வேண்டாம் என்று கூறிவிட்டார். 

அதன்பிறகு ஏ.வி.எம் படங்கள் நான் மகான் அல்ல உள்ளிட்ட சில படங்கள் வாய்ப்பு வந்தது. ஆனால் நடிக்க முடியாமல் போய்விட்டது. ரொம்ப நாளைக்கு பிறகு முத்து படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த படத்தில் எனக்கு வந்த கேரக்டர் நான் மாயா பசார் படத்தில் நடித்தது போன்ற ஒரு கேரக்டர். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் ரமேஷ் கண்ணா இருவரும் அந்த கேரக்டரை டெவலப் பண்ணி ரொம்ப பெரிய கேரக்டராக மாற்றிவிட்டார்கள். 

அதன்பிறகு ரஜினி சார் எனக்கு போன் செய்து உங்க கேரக்டர் ரொம்ப பெரிய கேரக்டராக ஆகிவிட்டது. மீனா கேரக்டர் கீழ போய்டுச்சி, என் கேரக்டரையே சில இடங்களில் முந்தி செல்வது போல் உங்க கேரக்டர் இருக்கிறது. நீங்கள் நடிப்பில் அதை மேலும் பெரிதாக்கிவிடுவீர்கள். அதனால் உங்கள் கேரக்டருக்கு முக்கியத்துவம் குறைக்க போகிறோம். ஓகே.வா என்று கேட்டார். நான் முக்கியத்தும் இருந்தால் நடிக்கிறேன். அப்படி இல்லை என்றால், ஒரு பாடலுக்கு, க்ளாமர் ட்ரஸ் போட்டு ஆடிட்டு போக என்னால் முடியாது என்று சொல்லிவிட்டேன். 

அப்போது ஆயுதபூஜை படத்திற்காக நாகர்கோவிலில் இருந்தேன். இந்த விஷயத்தை சொல்ல ரஜினி சாரே எனக்கு போன் செய்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அவரிடம் இன்னொருமுறை வாய்ப்பு வரும்போது நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன் என்று கூறியுள்ளார். ஆனால் இன்றுவரை ரஜினிகாந்த் ஊர்வசி இணைந்து நடிக்கவே இல்லை.



Source link