புதுடில்லி: பாகிஸ்தானின் நரோவால் பகுதியில் நூற்றாண்டு பழமையான ஹிந்து கோவில் இடிக்கப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: பாகிஸ்தானின் நரோவால், சிராஜ் கிராமத்தில் உள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஹிந்து கோவில் இடிக்கபப்பட்டதாக வரும் கவலையளிக்கும் செய்திகளை நாங்கள் ஆழ்ந்த கவலையுடன் கவனத்தில் கொண்டுள்ளோம்.
நூற்றாண்டு பழமையான சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலத்திற்கு எதிரான இந்த கண்டிக்கத்தக்க நாசவேலையை நாங்கள் கண்டிக்கிறோம். அதிகாரிகளின் வெளிப்படையான அலட்சியமும், இந்த நூற்றாண்டு பழமையான கோவிலைப் பாதுகாக்கத் தவறியதும் கவலையளிக்கிறது.
இதுபோன்ற சம்பவங்கள், பாகிஸ்தானில் சிறுபான்மை சமூகங்கள் தொடர்ந்து பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதையும், அவர்களின் மத சுதந்திரங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் கடுமையாக மீறப்படுவதையும் தெளிவாக நினைவூட்டுகின்றன.
இந்தச் சம்பவம் குறித்து விரைவான மற்றும் வெளிப்படையான விசாரணையை நடத்தி, பொறுப்பானவர்கள் முழுமையாகப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் அரசை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். கோவிலை மீட்டெடுக்க உடனடித் தீர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அத்துடன், தனது அனைத்து சிறுபான்மை குடிமக்கள் மற்றும் அவர்களின் கலாசார பாரம்பரியத்தின் பாதுகாப்பு, நலன் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் தனது முதன்மைக் கடமையை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
